search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "detain immigrant families"

    சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக 45 சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். #TrumpImmigrantPolicy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார். இருப்பினும், இன்னும் பல குழந்தைகள் பெற்றோருடன் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கும் நடமுறையை முடிவுக்கு கொண்டு வர அனைத்து மாநிலத்திலும் உள்ள 45 சட்ட அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

    சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து காவலில் வைத்திருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    கைது நடவடிக்கைக்கு பதிலாக, ஒரு குடும்பத்தினர் சட்டவிரோதமாக குடியேறுகிறார் என்றால், குடும்ப தலைவரின் கையில், ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் அடங்கிய கருவியை பொருத்திவிட்டால், அந்த குடும்பத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக குடியேறிகள் குடும்பத்தோடு கைது செய்யும் நடவடிக்கையை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரும் எதிர்த்து கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×