search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotee offering vilva leaf to Shiva"

    • இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.
    • 11 ஆண்டுகளாக தினமும் சிவனுக்கு வில்வ இலையை வழங்கி வருகிறார்.

    இந்த உலகை படைத்தது இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. அந்த வகையில் சிவன் என்பவர் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். அந்த சிவனுக்கு தொண்டு செய்ய தனது கனவில் பணித்ததையடுத்து தினமும் சிவனுக்கு வில்வ இலையை அர்ச்சனைக்கு வழங்கி வருகிறார் ஒரு முதியவர். அதுவும் ஒரு நாள், 2 நாள் அல்ல, கடந்த 11 ஆண்டுகளாக, அதாவது 133 மாதங்களாக அவர் வில்வ இலையை வழங்கி வருகிறார்.

    அவ்வாறு வில்வ இலையை வழங்கி வருபவர், 71வயது முதியவரான கணேசன். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்.சுத்திப் பட்டு. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தம் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தார்.

    சிவனுக்கு வில்வ வழங்கும் சிவபக்தரான கணேசன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

    பிரதோஷம் நடைபெறும் நேரத்தில் கருவூரார் சன்னிதியில் யாரும் வழிபடுவது இல்லை. அந்த நேரத்தில் 48 நாட்கள் தியானம் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தியானம் செய்வதற்கு அனுமதிகேட்டார். அன்று இரவு அவருடைய கனவில் இறைவன் தோன்றி, குருப்பெயர்ச்சி அன்று திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து தியானம் செய்' என்று கூறினாராம்.

    அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு திருச்செந்தூர் சென்று வழிபட்டு விட்டு வந்து கருவூரார் சன்னிதியில் தியானம் செய்து வழிபட்டார். 48 நாட்கள் தொடர்ச்சியாக தியானம் செய்து முடித்த நிலையில், மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், தினமும் பெருவுடையாருக்கு (சிவன்) அர்ச்சனைக்கு வில்வ இலை கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அதன்படி 2011-ம் ஆண்டு மார்கழி 1-ந்தேதி முதல் தற்போது வரை தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக வில்வ இலை கொடுத்து வருகிறார்.

    இது பற்றி கணேசன் கூறும்போது,

    "எனக்கு மங்கையற்கரசி என்ற மனைவியும், சுகன்யா, திவ்யா, ஆனந்தி என்ற 3 மகள்களும், மணிகண்டன் என்ற கண்பார்வை தெரியாத மகனும் உள்ளனர். 3 பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிராம நிர்வாக அதிகாரி வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின், மளிகைக் கடை நடத்தி வந்தேன். தற்போது அந்தக் கடையையும் மகளிடம் கொடுத்துவிட்டேன்.

    தினமும் இறைவன் எனக்கு வில்வ இலையை கொடுக்குமாறு கட்டளை இட்டதால் நான் தினமும் வில்வ இலையை பறித்து அர்ச்சனைக்காக வழங்கி வருகிறேன். தினமும் காலை 5.45 மணிக்கெல்லாம் கோவிலுக்கு குருக்கள் வரும் போது அவரிடம் அர்ச்சனை செய்வதற்கான வில்வ இலையை வழங்கி வருகிறேன். என்னிடம் இருசக்கர வாகனம், சைக்கிள் எதுவும் கிடையாது.

    எனவே நடந்தே கோவிலுக்கு சென்று வில்வ இலையை வழங்கி வருகிறேன். இறைவன் மீதான பக்தியால் பெருவுடையார் கோவிலுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள சங்கரநாராயணன் கோவிலுக்கும், கொங்கணேசுவரர் கோவிலுக்கும் கூட வில்வ இலையை வழங்கி வருகிறேன்.

    கடந்த 11 ஆண்டுகளாக எந்தமழை பெய்தாலும், புயல் அடித்தாலும் என் பணியை தவறவிட்டதில்லை. அதேபோல கோவில் குருக்களும் நான் தினமும் வழங்கி வருவதால், என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். வில்வ இலையை கொடுத்துவிட்டு அர்ச்சனை முடிந்து, சாமி தரிசனம் செய்த பிறகுதான் அங்கிருந்து மற்ற கோவிலுக்கு புறப்படுவேன். கொரோனா காலக்கட்டத்தில் கூட, ஒரு நாள் விடாமல் வில்வ இலையை வழங்கினேன்.

    ஊரடங்கின் போது காலை 6 மணிக்கு பிறகுதான் போலீசார் கெடுபிடி இருக்கும். அதேநேரம் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாததால், அதிகாலை 4.30 மணிக்கே வில்வ இலையை பறித்துக்கொண்டு, பெரியகோவில் வாசலில் குருக்கள் வரும் வரை காத்திருந்து கொடுத்து விட்டு வீடு திரும்புவேன்.

    காசு, பணம் எல்லாம் கடவுளின் முன்பு ஒன்று மில்லை. பக்திதான் உயர்ந்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது வீட்டில் ஒரு தேங்காய் வைத்து வழிபட்டேன். அதைத்தான் தற்போதும் விநாயகராக போற்றி வணங்கி வருகிறேன்.

    ஒரு முறை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு அகோரி வந்து என்னை மளிகைக் கடையில் சந்தித்தார். அதோடு சிவன் தரச் சொன்னதாக ருத்ராட்ச மாலை ஒன்றையும் கொடுத்தார். அதைத்தான் தற்போதும் அணிந்திருக்கிறேன்.

    என்னுடைய உடலை விட்டு உயிர் பிரியும் வரை, வில்வத்தை வழங்க, இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றார்.

    ×