search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP Description"

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை பத்திரமாக மீட்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். #SterileProtest #ThoothukudFiring
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த மே 22 மற்றும் 23-ந் தேதிகளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில், ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன், பாவேந்தன், நடிகர் சீமான், வக்கீல் சூர்யபிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?’ என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்தவுடன், ‘துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிட கூடாது? என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அரசு பிளடர் டி.என்.ராஜகோபாலன், ‘இதுதொடர்பாக விரிவான பதில்மனுவையும், வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்கிறேன். தற்போது சி.பி.சி.ஐ.டி., விசாரணை சரியான கோணத்தில் நடந்து வருகிறது. அதனால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து, ‘துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கர சுப்பு, ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஏற்கனவே 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை எல்லாம் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி, ஒரே இடத்தில் மொத்தமாக விசாரிக்க வேண்டும். அல்லது சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை மதுரை கிளைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு அரசு பிளடர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘வக்கீல்கள் சிலர் மதுரை கிளையில் உள்ள வழக்குகளை அங்கே தான் விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். இந்த வழக்குகள் மதுரைக்கு மாற்றப்படாது. அதேபோல, அங்குள்ள வழக்குகளும் சென்னைக்கு மாற்றப்படாது’ என்று தெளிவுபட கூறினார்கள்.

    இதையடுத்து வக்கீல் சங்கரசுப்பு, ‘தூத்துக்குடியில் அதிகாலையில் ஒவ்வொரு வீடாக போலீசார் சென்று அங்குள்ள இளைஞர்களை பிடித்து சென்று அடித்து துன்புறுத்துகின்றனர். தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இது தவிர, உள்ளூர் போலீசார், ஒரு சைக்கிள் சேதப்படுத்தப்பட்டது. ஒரு மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது என்று ஒவ்வொரு சேதப் பொருட்களுக்கும் ஒரு வழக்கு என்று பதிவு செய்து, பலரை கைது செய்கின்றனர். ஒரு இளைஞர் 70 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘வழக்குகளுக்கோ, வழக்கு விசாரணைக்கோ தடை எதுவும் விதிக்க முடியாது. வேண்டும் என்றால், தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்குகளை ரத்து செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம் போலீசார் மட்டுமல்ல, அத்துமீறலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    முன்னதாக, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தொடர்ந்த வழக்கு, தமிழக டி.ஜி.பி. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மே 22-ந் தேதி பனிமயமாதா கோவில் முன்பு திரண்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தை களைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள குடியிருப்புக்கு சிலர் தீ வைத்தனர். இதனால் 150 குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

    அதேபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை பத்திரமாக உயிருடன் மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏராளமான தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×