search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharmapuri girl molestation death"

    அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட உண்மை அறியும் குழுவினர் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். #dharmapurigirlmolestation

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிர் இழந்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட உண்மையை அறியும் வகையில், முன்னாள் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா தலைமையிலான குழு கள ஆய்வு மேற்கொள்ள சிட்லிங் மலை கிராமத்திற்கு வந்தனர்.

    இந்த உண்மையறியும் குழுவின் நோக்கம், தொடர்ந்து தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம், இவற்றில் இருந்து பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதலை தடுப்பது பற்றி ஒரு விரிவான உயர்மட்ட கள ஆய்வை மேற்கொள்வதாகும்.

    இதில் முன்னாள் யுனிசெப் இயக்குநர் அருணா ரத்தினம், ஓய்வு பெற்ற தடயவியல் மருத்துவர் சேவியர் மற்றும் வழக்கறிஞர்கள் மார்ட்டின், கணேசன், ஹாலோசீஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், மாணவியின் வீட்டிற்கு வந்து, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடத்தில் தனி அறையில் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    கோட்டப்பட்டி போலீஸ் நிலையம் மற்றும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, விசாரணை அதிகாரி லட்சுமி ஆகியோரிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டனர். மாணவி தங்கியிருந்த தொப்பூர் குறிஞ்சி நகரில் உள்ள வள்ளலார் குழந்தைகள் நல காப்பகத்துக்கு சென்று காப்பக பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு ஆஸ்பத்திரி டீனை சந்தித்து மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தனர். மாணவியின் பிரேத பரிசோதனை எப்படி நடந்தது என்பது குறித்தும் கேட்டனர்.

    இது குறித்து ஒரு அறிக்கை தயாரித்து குழுவிடம் வழங்க இருப்பதை டீன் தெரிவித்தார். பின்னர் அந்த குழுவினர் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்று விசாரணை நடத்த உள்ளனர். கலெக்டரை சந்தித்து பேச அனுமதியும் கேட்டு உள்ளனர். #dharmapurigirlmolestation 

    ×