search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diet for Diabetes"

    நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்; முற்றிலும் குணப்படுத்த முடியாது. நீரிழிவு நோயாளியின் வயது, உயரம், எடை, ஆண், பெண் உடலுழைப்பின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டே, அவரது உணவு முறையை தீர்மானிக்க வேண்டும்.

    ஒருவரது உடல் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு 1 கிராம் என்ற அளவில் தினமும் ஒரு வளர்ந்த மனிதனுக்கு, புரதம் தேவைப்படுகிறது. உடலில் ஏதேனும் நோய், குறைபாடு இருப்பின், இந்த அளவில் மாறுதல் தேவைப்படலாம்.

    கொழுப்பு சத்தில் இருந்து பெறப்படும் கலோரி, மொத்தமாக தேவைப்படும் கலோரியில் 30 சதவீதம் தாண்டக்கூடாது. அதிலும், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் சூரியகாந்தி எண்ணெய், கார்ன் எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் இருந்து 10 சதவீதம் என பிரித்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பர்.

    மேற்கண்டது போக மீதி கலோரிகள் கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்து பெறலாம். எளியவகை சர்க்கரை, கரும்பு சர்க்கரை போன்றவை சுலபமாக செரிமானம் ஆகி, மோனோ சேக்கரைட்களாக மாறி, விரைவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை பெருமளவில் கூட்டுகின்றன. ஆகவே அவற்றை தவிர்த்து காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்து கொண்டால் செரிமானம் ஆவதும், ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதும் தாமதம் ஆகும். உடல் தன்னை தயார்படுத்தி கொள்ள தேவையான நேரமும் கிடைக்கும்.

    எல்லா மனிதருக்கும் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கும் பிற தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியன தேவை. உணவு மூலம் கிடைப்பதில் பற்றாக்குறை நேர்ந்தால் மாத்திரை வடிவில் எடுக்கலாம்.

    ஓர் உணவு எவ்வளவு வேகமாக, மெதுவாக செரிமானம் ஆகிறது. உறிஞ்சப்படுகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இன்டெக்ஸ் அமைகிறது. எடுத்துக்காட்டாக முழு தானியங்கள் குறைந்த அளவு கிளைசமிக் இன்டெக்ஸ் உடையனவாக இருக்கின்றன. செரிமானம் ஆவதும், உறிஞ்சப்படுவதும் தாமதமாகும் காரணத்தால் நீரிழிவு நோயாளியின் இன்சுலின் குறைவாகவும், மெதுவாகவும் இருப்பதால் மேற்சொன்னது போன்ற உணவுகள் அவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.

    தேவையான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை, நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும்போது,  

    * இன்சுலின் எடுக்கும் அளவு குறையும்
    * கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைட்ஸ் அளவு (ரத்தத்தில்) குறையும்.
    * உடல் எடை குறைவது சுலபமாகும்.
    * ரத்த அழுத்தம் சீராகும்.

    நார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை, கரைய முடியாதவை என இருவகையாக உள்ளன. வெந்தயம் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்களால் குடலில் சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன. குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைக்கிறது.

    கரைய முடியாத நார்ச்சத்துக்களான செல்லுலோஸ், லிக்னைன் ஆகியன பழங்கள், காய்கறிகள், மற்றும் தானியங்கள், பருப்பு வகைகளில் உள்ளன. அவற்றை உண்ணும்போது, விரைவில் திருப்தியான உணர்வு தோன்றும். குடலில் உணவு தங்கும் நேரம் அதிகமாகும். மலச்சிக்கல் தடுக்கப்படும். குளுக்கோஸ் உறிஞ்சுவது தாமதம் ஆகும். தினமும் 40 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்கள் நீரிழிவு நோய். உடையவர்களுக்கு தேவைப்படுகிறது.

    நீரிழிவு நோய் உடையவர்களின் உடலால் அதிகப்படியான கலோரிகளை சேமிக்க இயலாது. தினசரி தேவையான அளவு கலோரிகளை குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய உணவுமுறையாக எடுத்துக் கொள்வது நல்லது.

    விருந்து, உபவாசம் இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இரண்டு முறையிலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். வெறும் திரவ உணவு எடுத்துக் கொள்வதும் கூடாது.

    கொழுப்பு சத்து குறைந்த காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை தரும். நமது பாரம்பரிய உணவுகளிலேயே சிறு, சிறு மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோய்க்குத்தக்கபடி மாற்றி அமைக்கலாம்.
    ×