search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissed"

    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
    • ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.

    எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.

    எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.

    இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.

    அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.

    • மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
    • குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் என பலர் படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் வணிகவியல் துறை தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பிரேம்குமார் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் விசாரணை நடத்தினார். மேலும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பாராதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்ன்ர் கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

    மேலும் புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் பிரேம்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மாணவ-மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பேராசிரியர் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து அவரை உயர் அதிகாரிகள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டனர்.

    • நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும்.
    • பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் நீண்ட காலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. இதை துணை முதல்-மந்திரியும், சுகாதார மந்திரியுமான பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த 17 டாக்டர்களையும் அதிரடியாக பணி நீக்கி அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்ததாவது:-

    நோய்க்கு சிகிச்சை அளிப்பதும், குணப்படுத்துவதும் கடவுளுக்கு செய்யும் சேவை ஆகும். மக்களுக்கு சேவை செய்வதும், சுகாதார பணிகளை வழங்குவதும் மிகப்பெரிய பாக்கியம்.

    அதில் எந்தவித அலட்சியத்துக்கோ, ஒழுக்கக் கேட்டுக்கோ இடம் இல்லை.

    ஆனால் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அத்துடன் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.

    எனவே அந்த 17 டாக்டர்களையும் பணியில் இருந்து நீக்குமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.

    இவ்வாறு துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியுள்ளார்.

    துணை முதல்-மந்திரியின் இந்த உத்தரவு கிடைத்திருப்பதாகவும், அதன்படி நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    எனினும் பணியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை.

    • மலைரெயில் பாதையில் 10-க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
    • மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழைக்கு அடர்லி, ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவும், மரங்கள் முறிந்ததால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கடந்த 8-ந் தேதி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் ரெயில்சேவை தொடங்கியது. ஆனால் அன்று இரவு கொட்டிய கனமழையால் மீண்டும் மண் சரிவு ஏற்படவே கடந்த 9-ந் தேதி முதல்18-ந் தேதி வரை மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மலை ெரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் குன்னூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைரெயில் பாதையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7-ந் தேதி வரையும், குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
    • சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கேட்டு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டன.

    சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவரம், இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இவரது மனுக்கள் மீது இன்று ஒரே நாளில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது.

    • ரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

    அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் பற்றி ரகசிய விசாரணை நடத்தினார். அதில் கோழிக்கோடு ரூரல் பகுதி ஜாய் தாமஸ், கண்ணூர் ரூரல் கோகுலன், கண்ணூர் நகரம் நிசார், கோழிக்கோடு ஷிபின், கண்ணூர் கிராமம் ஷெஜிர், காசர்கோடு ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    அவர்களில் ஜாய் தாமஸ், கோகுலன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவார். மற்ற 5 பேரும் சிவில் போலீஸ் அதிகாரிகள் ஆவார். அவர்கள் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் டிஸ்மிஸ் செய்து கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. புட்டா விமலாதித்யா உத்தரவிட்டார். கடமை தவறியது, ஒழுக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கேரள மாநில காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்.
    • காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர். இவர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட பின் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக் கூடத்திற்கு 8 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரும் ஊழல், முறைகேடு, விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.

    முதுகலைப் படிப்பு தொடங்குதாக கூறி ரூ.5 லட்சம் பல்கலைக்கூட வங்கிக் கணக்கில் இருந்து பொறுப்பு முதல்வர் எடுத்துள்ளார். காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார். இப்பணம் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை.

    பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரின் விதிமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் ஆதா ரங்களுடன் பல மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால், அம்மனுக்கள் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், துறைச் செயலர் இதில் தலையிட்டு, அரசு நிதியை முறைகேடு செய்த பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #RasipuramNurse #CBCID
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அமுதவள்ளி, ரவிச்சந்திரன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா ஆகிய 5 பேரும் கடந்த 6-ந் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  #RasipuramNurse #CBCID
    பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ponmanickavel
    புதுடெல்லி:

    சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீசார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த மனு மீதான வாத பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  #SupremeCourt #ponmanickavel 
    பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SupremeCourt #SterliteCopperPlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். #SupremeCourt #SterliteCopperPlant 
    ×