search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug addiction"

    • திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் போதைப்பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும்.
    • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள்.

    பயங்கரவாதத்தை மிஞ்சியது போதைப்பழக்கம்.

    பிறரால் உருவாகக்கூடிய பயங்கரவாதத்தை கூட பாதுகாப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்திவிடமுடியும். ஆனால் போதைப்பழக்கம் அப்படியல்ல...

    தடுப்பு நடவடிக்கைகள் மூலம் எவ்வளவுதான் தடுத்தாலும் உலக அளவில் போதைப்பொருள் பயன்பாடு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது.

    மது குடிக்காதே, கஞ்சா புகைக்காதே, போதைப்பொருளை எடுத்துக் கொள்ளாதே என விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் முடியுமே, தவிர அடக்குமுறையால் அடக்கிவிடமுடியாததாக இருக்கிறது போதைப்பழக்கம்.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் போதைப்பிரியர்கள் நினைத்தால் மட்டுமே அவர்கள் திருந்த முடியும்.

    அதையும் தாண்டி போதைக்கு அடிமையாகிவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய உதாரணம். போதை தன்னை மட்டும் கொல்லாமல், தான் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துவிடும்.

    வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் கேடாக அமைந்துவிடும் என்பதால்தான் போதையை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

    போதைப்பொருள் பயன்பாட்டால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றன.

    உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    இவர்களில் 3-ல் ஒருவர் பெண் என்பதும் போதைக்கு அடிமையாவோரில் 85 சதவீதம் பேர் படித்தவர்கள் என்பதும், 75 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதும் வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

    மது, கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் போன்ற மனிதனை அழிக்கும் போதைப்பொருள்கள் பல விதங்களில் புழக்கத்தில் உள்ளன.

    உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவத் தளவாடங்களுக்கு அடுத்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணப்புழக்கம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு தகவல்.

    12 முதல் 17 வயது வரை உள்ள இளவயது பருவத்தினர் அதிகம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டை தொடங்கும் நிலையில் இருக்கிறார்கள். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை அடையும் நிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள். சுமார் 3.1 கோடி பேர் கஞ்சாவும், 60 லட்சம் பேர் ஓபியாய்டுவும், 1.18 கோடி பேர் தற்போது மயக்க மருந்துகளை (மருத்துவம் அல்லாத பயன்பாடு) போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. 8.5 லட்சம் பேர் போதை ஊசி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் நாட்டில் போதைப்பொருளின் பன்முக தாக்கங்களின் தீவிரத்தை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் கடத்தலை தடு்ப்பது, போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குதல், ஆலோசனை வழங்குதல், உரிய சிகிச்சை அளித்தல், போதைப்பொருள் சார்ந்த நபர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றன.

    இளைய சமுதாயத்தினரிடையே போதைப்பொருள் ஊடுருவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் போலீஸ், தன்னார்வ ெதாண்டு நிறுவனத்தினர் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு என்பது குறைந்தபாடில்லை. போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு எதிராக பல சட்டங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் யாரும் மதிப்பதாக இல்லை. அதனால்தான் அதை ஒழிக்கும் நோக்கத்தை உலக நாடுகள் வலியுறுத்தும் விதமாக ஜூன் 26-ந்தேதி (இன்று) போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஐ.நா. சபை, உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது முயற்சிகளை விரிவுபடுத்துவோம். கூட்டு நடவடிக்கை மூலம், ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்ற போதைப்ெபாருள் ஒழிப்பு தின செய்தியாக தெரிவித்து இருக்கிறது.

    மக்கள் நலன் கருதி போதைப்பொருட்கள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன் வரவேண்டும். போதைப்பொருள் கடத்துவோருக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தியதால் நிலைகுலைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான வாழ்வாதாரங்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவற்றிற்கெல்லாம் மேலாக, உயிரை கொல்லும் போதை இன்னும் தேவைதானா என்று அதை பயன்படுத்துவோர் நினைக்க வேண்டும். தன்னையும், தன் குடும்பத்தினரையும் மனதில் கொண்டு போதைப் பொருளை தொடமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.

    போதை எனும் பாதை என்றைக்குமே தவறான இடத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதை உணர்ந்தால் நாமும், நாடும் நலம் பெறலாம். போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

    • போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
    • சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்

    60களில், தமிழகத்தில் குடிப்பழக்கம் என்பது பரவலாக இல்லை.

    ஆனால், அதற்கு பிறகு வந்த தசாப்தங்களில், மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள்.


    ஒவ்வொரு தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு மதுவிலக்கு பேசுபொருளாகி வருகிறது.

    சமீப சில வருடங்களாக போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேரூன்ற தொடங்கி உள்ளது.


    2021 செப்டம்பர் 13 அன்று, பிரபல தொழிலதிபர் அதானியால் நடத்தப்படும் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில், 3000 கிலோகிராம் ஹெராயின் பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் குஜராத் மாநில போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


    இந்தியாவிற்குள் கொண்டு வரும் போதைப்பொருட்களை, கடத்தல்காரர்கள் குஜராத் வழியாக கொண்டு வர முயல்வது தொடர்கதையாகிறது.

    குஜராத் துறைமுகத்தில் ரூ.19 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி, ரூ.21 ஆயிரம் கோடி, ரூ.3 ஆயிரம் கோடி, ரூ.2 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி என அடுத்தடுத்து வெவ்வேறு கால இடைவெளியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவது அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ எனும் சந்தேகத்தையே கிளப்புகிறது.

    என்டிபிஎஸ் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் அதிகளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் (1 லட்சம் கிலோ) , ம.பி. (32 ஆயிரம் கிலோ) , குஜராத் (12 ஆயிரம் கிலோ), அரியானா (11 ஆயிரம் கிலோ), உ.பி. (4 ஆயிரம் கிலோ), என பெரும்பாலானவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திலும் போதைப்பொருள் விற்பனையும், போதை பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதை காட்டும் வகையில் செய்திகள் வெளிவருவது, தமிழகம் எங்கே செல்கிறது எனும் கேள்வியை எழுப்புகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் செய்தி வெளியானது.

    தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வரும் தகவல்களை காணும் பொதுமக்கள், இந்த அபாயகரமான சிக்கலை மத்திய மாநில அரசாங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனரா என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.


    தென் சென்னை வரை தென்காசி வரை போதைப்பொருள் பழக்கம் பரவியுள்ளதாகவும், பள்ளி மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து காப்பது பெரும்பாடாக இருப்பதாகவும் பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) அண்மையில் தெரிவித்தார்.

    ஒரு சில விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களுடன் போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பெண்களும் உபயோகிப்பதாகவும் அவ்வப்போது வரும் ஊடக சான்றுகள் எதிர்கால இந்தியா குறித்து எதிர்மறை எண்ணங்களையே விதைக்கிறது.


    கடந்த சில வருடங்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் மதுபானம், சிகரெட் போன்றவற்றை விட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், உளவியல் நிபுணர்களையும், மூத்த குடிமக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது.


    குடிப்பழக்கம், சிகரெட் போன்றவைகளுக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்த தமிழக ஆண்களும் அவர்களால் பரிதவிக்கும் குடும்பங்களும் ஏராளம்.

    இந்நிலையில், எளிதாக கிடைக்க கூடிய பொருளாக போதைப்பொருட்கள் மாறினால், அதனால் ஏற்படும் சீரழிவு "வருங்கால தூண்கள்" என கூறப்படும் எதிர்கால தலைமுறையே மீள முடியாத அழிவை சந்திக்க நேரிடும் என்பதே பல பெற்றோர்களின் கவலையாக உள்ளது.

    சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும், துபாய், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் போதைப்பொருள் பழக்கத்தையும், கடத்தலையும் தடுக்க கடுமையான சட்டங்களும், அவற்றை அமல்படுத்துவதில் கண்டிப்பும் கடைபிடிக்கப்படுகின்றன.


    மனித வாழ்வின் முக்கிய காலகட்டமான இளமையையே வீணடித்து, உடலாரோக்கியத்தில் எண்ணிப்பார்க்க இயலாத நாசத்தை விளைவித்து, உறவுகளால் வெறுக்கப்பட்டு, நடைபிணங்களாக வாழ வைத்து விடும் இந்த ஆபத்தான பழக்கத்திற்கு இளைஞர்களில் ஒருவர் கூட பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு, முழுக்க முழுக்க மத்திய-மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

    • தொடர்ந்து போதை மருந்து வாங்க தம்பதியிடம் பணம் இல்லை
    • சகோதரனின் செயல் தெரிய வந்ததும் ரூபினா காவல்துறையிடம் புகார் அளித்தார்

    மும்பையை சேர்ந்த ஷப்பீர் கான் மற்றும் சானியா தம்பதியினருக்கு ஒரு அழகான 2 வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ஒரு மாதம் முன்பு சானியா, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    இத்தம்பதியினருக்கு போதை மருந்து எடுத்து கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், தொடர்ந்து போதை பொருட்களை வாங்க இவர்களிடம் போதுமான அளவு பணம் இல்லை.

    இந்நிலையில் இவர்களுக்கு, குழந்தையை விற்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விற்கும் இடைத்தரகராக செயல்படும் உஷா ரத்தோட் என்பவர் அறிமுகமானார்.

    உஷா மூலம் தங்கள் ஆண் குழந்தையை ரூ.60 ஆயிரத்திற்கு ஷக்கீல் தம்பதியினர் விற்று விட்டனர். அவர் மூலமாகவே தங்கள் பெண் குழந்தையையும் ரூ.14 ஆயிரத்திற்கு ஷகீல் மக்ரானி என்பவருக்கு விற்று விட்டனர்.

    ஷப்பீரின் சகோதரி ரூபினா கானுக்கு போதை மருந்து வாங்க ரூ.74 ஆயிரத்திற்கு தங்கள் குழந்தைகளை தன் சகோதரன் விற்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து டி.என். நகர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

    இதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மும்பை குற்றவியல் பிரிவிடம் வழக்கை மாற்றம் செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்ற வழக்கில் ஷபீர், சானியா, ஷகீல் மற்றும் இடைத்தரகர் உஷா ஆகியோரை கைது செய்தனர்.

    பெண் குழந்தையை மீட்டுள்ள காவல்துறையினர், ஆண் குழந்தையை வாங்கியவரை தேடி வருகின்றனர்.

    • போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    செங்கல்பட்டு:

    பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளி பருவத்திலேயே சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளிகளில் மருத்துவ பரிசோதனையின் போது மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். போதைப்பழக்கத்துக்கு தேவையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி தேசிய இளைஞர் அணி தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரேம் யோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் ஷிவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கமானது அதிகரித்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க ஆளும் தி.மு.க. அரசு தான் காரணம். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முன்னதாக மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம், சான்றிதழ்களை அவர் வழங்கினார்

    மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நகரத் தலைவர் பிரவீன், நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி எஸ்.டி. அணி மாவட்ட தலைவர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவரும், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினருமான மோகன்ராஜா, துணைத் தலைவர், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பொருளாளர் பிரசாத், இணைச்செயலாளர் முகமது அப்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு, பொதுக்குழு உறுப்பினர் தங்க ராஜா முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் நிலைய பயிற்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

    • நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும். அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
    • மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி மணிகூண்டு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனிதாராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன்வசந்த்ஜாபேஸ், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், கல்லூரி முதல்வர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 2000 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே பள்ளியை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நிஷை, நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும் அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் வீடுகளை சேர்ந்தவர்களையும் சுற்றத்தாரையும் போதைப்பொருளிருந்து விடுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள், கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.

    சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.
    சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் அகரம் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் ராசி பாளையம், பீடம்பள்ளி காங்கியம்பாளையம் , கலங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததற்கு தலைமை ஆசிரியர்களை பாராட்டப்பட்டனர். விழாவில் நடிகரும், அகரம் அறக்கட்டளையின் தலைவருமான சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது-

    14 வயதிலிருந்து யோகாவை கற்றுக் கொண்டேன். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தவன். உடம்பை பேணிக் காக்க வேண்டும். அறிவு அப்படியேதான் இருக்கும். உடம்புக்குத்தான் வயது ஆகும். நமது உடம்பை கெட்ட காரியங்களுக்கு ஏற்படுத்தி நாசமாக்கி விடாதீர்கள். மிகவும் மோசமான காலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

    சாகும் வரை மது பழக்கத்திற்கும், சிகரெட், போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்டுங்கள். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள்.

    வாழ்க்கை பற்றி புரியும் பொழுது உடம்பு கட்டுப்படாது. உங்கள் உடம்புகளைப் பேணிக் காப்பது நல்லது. சாதனை செய்ய வயது முக்கியமில்லை. உடம்பு தான் முக்கியம். அதைப் பேணிக்காத்தால் எல்லா சாதனைகளை செய்யலாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். தாய், தந்தை தான் தெய்வம். அவர்களை முதலில் வணங்குங்கள்.

    இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்களான முன்னாள் அமைச்சர்.செ.ம. வேலுச்சாமி, சப்-கலெக்டர் கார்மேகம்,சூ.ரா.தங்கவேலு, சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்கராஜ், மாவட்ட கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார். இதில் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். #Agaram #Sivakumar
    ×