search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "durga viratham"

    துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.
    துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும். அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

    அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். எழுமிச்சம்பழக் கிண்ண விளக்கில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும். ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் விரதமிருந்து இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம்பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள்.

    மன நிம்மதி பெறுவீர்கள். தீபாராதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும். பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கி விட்டு வர வேண்டும்.
    ஒன்பது இரவுகள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், பொன், பொருள் குவியும். துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை விரதம் இருந்து வழிபடுவது அவசியமாகும்.
    மாசி மாதத்தில் சிவனுக்கு உகந்த ‘சிவராத்திரி’ வருவது போல், புரட்டாசி மாதம் அம்பிகையைக் கொண்டாட உகந்தநாள் ‘நவராத்திரி’ வருகின்றது. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ என்று பொருள். ‘ராத்திரி’ என்றால் ‘இரவு’ என்று பொருள். ஒன்பது இரவுகள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு வந்தால், பொன் - பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் புரட்டாசியில் நவராத்திரி தொடங்கினாலும், புரட்டாசி 31-ந் தேதி (17.10.2018) அன்று துர்க்காஷ்டமி வருகின்றது.

    ஐப்பசி முதல் நாள் தான் சரஸ்வதி பூஜையும், அடுத்த நாள் விஜயதசமியும் வருகின்றது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த நவராத்திரி நாட்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். கொலுவில் இடம்பெறும் பொம்மைகள் எல்லாம் ஒவ்வொரு உண்மைகளைச் சொல்லும் விதத்தில் அலங்கரித்து வைத்து, அதற்கு மேலே நடுநாயகமாக ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒன்பது வடிவங்களில் அலங்கரித்து விழா கொண்டாடுவது வழக்கம். வீட்டில் கொலு வைத்துக் கொண்டாடுவதன் மூலம், விருந்தினரை உபசரிக்கும் குணம் நமக்கு வருகிறது. வழிபடுவதன் மூலம் வளர்ச்சியும் ஏற்படுகிறது.

    ‘கல்வியா? செல்வமா? வீரமா? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?’ என்று கவியரசு கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இருந்தால் தான், கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் ‘வீரம்’ தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாட்களும், ‘செல்வம்’ தரும் லட்சுமிதேவியை அடுத்த மூன்று தினங்களும், ‘கல்வி’ தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட்டால் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறத் தொடங்கும்.

    தேவியின் அருள் கிடைக்க, தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில், எல்லா பொருட்களும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக நாம் கொலு வைத்துக் கொண்டாடு கிறோம். அசையாத பொம்மைகள் மூலம் அசைந்து வரும் வாழ்க்கை உண்மைகளை உலகிற்கு உணர்த்துவதே இந்த நவராத்திரி விழாவாகும்.

    ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டால் தடை, தாமதங்கள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த அடிப்படையில் உருவானது தான் நவராத்திரி விழா.

    கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும். படிக்கட்டுக்களில் வெள்ளை அல்லது மஞ்சள் துணிகளை விரிக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதத்தில் அலங்காரங்கள் செய்து நவரத்தின மாலைகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

    நைவேத்தியப் பொருட்களாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, பொரி, தேங்காய், பழம் வைக்க வேண்டும். வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம், புஷ்பம் மற்றும் நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வழங்கி அன்போடு வருபவர்களை உபசரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையின் பாடல்களை ஒவ்வொரு ராகத்தில் பாடி அம்பிகையைக் குளிர்விக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றும் நாம் அன்றாடம் அம்பிகையை வழிபட்டு வர வேண்டும்.

    கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங் களான புல், செடி, கொடி, தாவர வகைகளை வைக்கவேண்டும். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட உயிரினங்களான நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்யவேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும். நான்காவது படியில் நான்குஅறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகளையும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளையும், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

    ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், சிறு தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்கவேண்டும். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகைளையும், அவர் களின் துணைவிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரது உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும். வலது கை, இடது கை நீங்கலாக, நம்பிக்கை என்ற ‘கை’ நமக்குத் தேவை. அந்த நம்பிக்கையை துர்க்கை மீது வைத்து வழிபடுவதற்கு உகந்த நாள் தான் துர்க்காஷ்டமி. செம்பருத்தி, செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து விரதம் இருந்து வழிபட்டு வருவது நல்லது.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    ×