search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DVAC File"

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை 17-ம் தேதி தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EdappadiPalaniswami #RSBharathi #DMK
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக டெண்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த வரைவு அறிக்கையை ஊழல் தடுப்புப்  பிரிவு இயக்குனருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் அளித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.



    அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், டெண்டர் மதிப்பு உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், தங்கள் தரப்பிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரிக்கப்படவில்லை என ஆர்எஸ் பாரதியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து, வழக்கு விசாரணை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். டெண்டர் நடைமுறைகளை லஞ்ச ஒழிப்பு துறை வல்லுநர் குழு ஆய்வு செய்ததா?, முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதா என விசாரித்தீர்களா? என கேள்வி எழுப்பினார். அத்துடன், முதல்வர் மீதான புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை வரும் 17-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். #EdappadiPalaniswami #RSBharathi #DMK
    ×