search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "economic offenders"

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. #Parliament #EconomicOffenders
    புதுடெல்லி:

    விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். தற்போதைய சட்டங்களில், அத்தகையவர்களின் சொத்துகளை பறிப்பதற்கான ஷரத்துகள் இல்லை. இதனால், வங்கிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.



    அதன்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018 என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

    ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள், இந்த மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியதுடன், இந்தியாவில் சட்ட நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள மறுத்தால், அவர்கள் மீது தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

    அவர்கள் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஆஜராகாவிட்டால், அவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்படும். அதன்பிறகும் அவர்கள் வராவிட்டால், கோர்ட்டு மூலம் அவர்களை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியும் நியமிக்கப்படுவார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு அந்த குற்றவாளி, உரிமை கொண்டாட முடியாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 19-ந் தேதி, இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய நிதி மந்திரி பியுஷ் கோயல் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பியவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம். அவர்கள் திரும்பி வந்துவிட்டால், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படமாட்டாது. அவர்கள் வழக்கை சந்தித்து, தங்களை நிரபராதி என்று நிரூபிக்க முயற்சிக்க வேண்டும்.

    அவர்கள் கோர்ட்டை பயன்படுத்துவதற்கான உரிமையை மத்திய அரசு தடுக்காது. வெளிநாட்டுக்கு தப்புவதை தடுப்பதற்கும் மசோதாவில் வழி உள்ளது. விசாரணை அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படும். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட நடைமுறைகளும் இந்த சட்டத்தில் பயன்படுத்தப்படும்.

    குற்றவாளிகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்காக 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளுடனும் தூதரக வழிமுறைகளை முழுமையாக பயன்படுத்தி, குற்றவாளிகளை மீட்க முயற்சிப்போம்.

    பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு தப்பியவர்கள், இந்தியாவில் உள்ள தங்களது சொத்துகளை காப்பாற்றி கொள்ளலாம் என்ற நிலை இனிமேல் இருக்காது.

    இவ்வாறு பியுஷ் கோயல் பேசினார்.

    பின்னர், இந்த மசோதா, மாநிலங்களையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனால், இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிவிட்டது.   #Parliament #EconomicOffenders #tamilnews 
    ×