search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "economically weaker section"

    மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு 1-ந்தேதி முதல் வழங்கப்படும். #10PercentReservation #CentralGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக அரசியல் சாசனத்தின் 124-வது திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்ட அந்தஸ்தை பெற்றுவிட்டது.

    இதையடுத்து மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதுகுறித்த முறையான உத்தரவை மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையை பெறாதவர்கள், அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கிறபோது அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையைப் பெற அடையாளம் காணப்படுவார்கள்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசு பணிகள் மற்றும் சேவைகளில் பிப்ரவரி 1-ந்தேதி அல்லது அதற்கு பின்வரும் அனைத்து நேரடி ஆள் சேர்ப்பிலும் வழங்கப்படும்.

    மேலும் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் சதுர அடியோ, அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீடு, 300 சதுர அடியோ அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீட்டு மனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடியோ அதற்கு மேலோ வீட்டுமனை உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    ×