search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education officer house"

    கோடிக்கணக்கில் முறைகேடு புகாரின் பேரில் சென்னையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #VigilanceDepartment #Raid
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் உள்ளது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார். இந்த பயிற்சி மையத்தின் செயல்பாட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    பள்ளி மாணவர்களுக்காக இந்த பயிற்சி மையம் சார்பில் மாதஇதழ் நடத்தப்படுகிறது. அந்த மாத இதழுக்காக அரசு ஒதுக்கிய நிதியிலும், உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் கல்வியியல் பாடத்திட்டம் குறித்து நடத்தப்படும் வல்லுனர்குழு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தாமல், நடத்தியதாக கணக்கு காட்டி அதிலும் முறைகேடு நடந்ததாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்று தெரியவந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கு அடிப்படையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அறிவொளியின் அலுவலகத்திலும், கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் ஒரேநேரத்தில் நேற்று காலை 10 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் வசிக்கும் வீடு 3 அடுக்குமாடி குடியிருப்பாகும். கீழ்தளத்தில் அறிவொளி வசிக்கிறார்.

    இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதையொட்டி அறிவொளியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அறிவொளியின் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் அறிவொளியின் அனுமதியோடு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அறிவொளியோடு, மாநில முறைசாரா கல்வித்துறை இயக்குனர் ஆர்.லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியை சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை சித்ரா, சேலம் மாவட்டம் எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட 2 இதழ்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ‘உலகெல்லாம் தமிழ்’ என்ற திட்டத்துக்காக 5 வீடியோ படங்கள் தயாரிக்க ரூ.17 லட்சத்து 98 ஆயிரத்து 400 ஒதுக்கப்பட்டது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது. கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்வி செயற்கை கோள் வாங்கியதிலும் ரூ.2 கோடி சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மேற்கண்ட தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. #VigilanceDepartment #Raid

    ×