search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "effected"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் செய்து முடிக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகிவிடும். எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுமா என்று குழப்பம் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. #gajacyclone #byelection

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே நிலவுகிறது. திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதற்காக திருப்போரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் ‘பூத்’ வாரியாக வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    வாக்காளர் பட்டியலில் உள்ளபடி வாக்காளர்கள் உள்ளார்களா? அல்லது முகவரி மாறி சென்று விட்டார்களா? என்று சரி பார்த்து வருகின்றனர். ஆனால், கஜா புயல் பாதித்த தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் எந்த கட்சியினரும் ஈடுபட வில்லை.

    எனவே இடைத்தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி தேர்தல் கமி‌ஷன் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    அரசியல் சாசனப்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    அப்படி தேர்தல் நடத்தும் போது அந்த மாநிலத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டிருந்தால் தேர்தல் நடத்தும் உகந்த சூழல் உள்ளதா? என்று மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம்.

    ஏனென்றால் அவர்கள் தான் கிராமம் கிராமமாக வாக்குச்சாவடியை அமைத்து தர வேண்டும். அரசு ஊழியர்களை ஒதுக்க வேண்டும்.

    இப்போதைய சூழ்நிலையில் 12 மாவட்டங்களில் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட கலெக்டர்கள் புயல் நிவாரண பணிகளில் தான் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்களும் அந்த பணியில் தான் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் திடீரென இடைத்தேர்தல் தேதியை அறிவித்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் கிடைக்காமல் போய்விடும். எனவே அந்த தவறை தேர்தல் கமி‌ஷன் செய்யாது.

    இடைத்தேர்தல் என்றாலே மாநில அரசிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தான் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும். அந்த வகையில் நாங்கள் தமிழக அரசுக்கு விரைவில் கடிதம் எழுதி கேட்க உள்ளோம். அவர்கள் தரும் பதிலை பொறுத்து தேர்தல் கமி‌ஷன் முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை செய்து முடிக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகிவிடும். அதன்பிறகு தான் அந்த பணிகளில் இருந்து ஓரளவு விடுபட முடியும்.

    இப்போது டெல்டா மாவட்டங்கள் போர்க்களம் போல் சிதைந்து சின்னா பின்னமாகி கிடக்கிறது. இந்த சூழலில் தேர்தலை நடத்தலாம் என்று நாங்கள் அனுமதித்தால் அனைத்து பணிகளும் முடங்கிவிடும்.


    எனவே இப்போது தேர்தல் வேண்டாம். பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு விரைவில் கடிதம் எழுத இருக்கிறோம்.

    அதன் அடிப்படையில் தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரன் கட்சியை தவிர மற்ற கட்சிகள் தற்போதைய சூழலில் இடைத்தேர்தலை விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏனென்றால் ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை செலவு செய்ய வேண்டி வரும்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிக்கு தேர்தல் வந்தால் அலைச்சல், செலவு மிச்சமாகும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட ஆரம்பித்துள்ளனர். #gajacyclone #byelection

    ×