search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "enters"

    சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திவரும் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இன்று காலை மேலும் 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. #jactogeo #hungerstrike
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்- ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கை உள்பட சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள்.

    கடந்த மாதம் இந்த அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை குழுவின் பரிந்துரை எதையும் அரசு வெளியிடவில்லை. இதையும் வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 250 பேர் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று அவர்களது உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது. இதுபற்றி சட்டசபையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகவும் எனவே எதிர்க்கட்சியினர் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

    என்றாலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எழிலகத்துக்கு சென்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதுபோல நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களும் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் இன்று (புதன் கிழமை) 3-வது நாளாக நீடித்தது.



    திங்கட்கிழமை முதல் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதனால் நேற்று 2-வது நாள் போராட்டத்தின் போது பெரும்பாலானவர்கள் தளர்ச்சி அடைந்தனர். நேற்று மாலை பலர் உட்காரக் கூட முடியாமல் படுத்துவிட்டனர்.

    நேற்று இரவு ஒருங்கிணைப்பாளர்கள் டெய்சி, மோசஸ், நந்தகுமார் ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை மேலும் 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மயக்கம் அடையும் நிலையில் தங்களை முதல்-அமைச்சர் அழைத்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்-அமைச்சர் அழைக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக இன்று காலை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். அதில் மூத்த நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், மாயவன், முத்துசாமி, அன்பரசு ஆகியோர் மிகவும் தளர்ச்சியான நிலையில் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், மாயவன், தாஸ் மூவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வழக்கம்தான். ஆனால் இதற்குமுன்பு போராட்டம் நடத்திய போதெல்லாம் அமைச்சர் அல்லது முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசி போராட்டத்துக்கு தீர்வு காண்பார்கள்.

    ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் எங்களை அழைத்து பேச மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அரசு வருவாயில் 40 சதவீதம் சம்பளமாக கொடுக்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டது. நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் பேசுகையில், “அரசு வருவாயில் 70 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுப்பதாக கூறியுள்ளார். இவை தவறான தகவல்கள் ஆகும்.

    சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்கிறார்கள். அரசுக்கு வருவாய் தொடர்பான புதிய தகவல்களை எங்களால் கொடுக்க முடியும். எங்களிடம் அதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன.

    எங்களிடம் உள்ள வழிமுறைகள் பற்றி அரசிடம் தெரிவிக்கவே நாங்கள் எங்களை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்கிறோம். அதை சொல்வதற்குகூட எங்களுக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள். எங்களை அழைத்து பேச மறுத்தால் நாங்கள் எப்படி அந்த வழிமுறைகளை தெரிவிக்க முடியும்.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த வழியாகதான் செல்கிறார்கள். ஆனால் உண்ணாவிரதம் இருக்கும் எங்களை அழைத்து பேச அவர்களுக்கு மனம் இல்லை. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

    இதே நிலை நீடித்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. எங்களது அடுத்தக்கட்ட போராட்டம் வேறு வடிவத்தை கொண்டு இருக்கும்.

    அத்தகைய நிலைக்கு எங்களை அரசு தள்ளக் கூடாது. தமிழக அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #jactogeo #hungerstrike

    ×