search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVMs recovered"

    பீகாரில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
    முசாபர்பூர்:

    பாராளுமன்ற 5-வது கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியும் அடங்கும்.

    அங்கு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான கோட்டாட்சியர் அவதேஷ் குமார், முசாபர்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஒரு வாகனத்தில் வந்தார். வாகனத்தில், 6 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இருந்தன.

    அந்த எந்திரங்கள் அவரது உத்தரவுப்படி, கீழே இறக்கப்பட்டன. ஓட்டலில் உள்ள ஒரு அறைக்குள் அவை வைக்கப்பட்டன.

    இதற்கிடையே, ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மகாகூட்டணி பிரமுகர்கள், இந்த காட்சியை தற்செயலாக பார்த்து விட்டனர். ஏதோ முறைகேடு செய்ய திட்டம் நடக்கிறது என்று அவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    உடனடியாக அந்த கூட்டணியின் உள்ளூர் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா வேட்பாளர் அஜய் நிஷாத்தை வெற்றி பெற வைப்பதற்காக அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு பெட்டக அறையிலோ அல்லது வாக்குச்சாவடியிலோ தான் வைக்க வேண்டும். வேறு இடங்களில் வைக்கக்கூடாது என்பது விதிமுறை. எனவே, இந்த விதிமுறையை மீறி, ஓட்டல் அறைக்குள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை வைத்திருந்ததற்காக, தேர்தல் அதிகாரி அவதேஷ் குமாருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கியது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்களை கீழே இறக்க உதவிய 5 போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்தார்.

    இருப்பினும், அந்த 6 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவோ, அவற்றின் ‘சீல்‘ உடைக்கப்படவோ இல்லை என்று கலெக்டர் கோஷ் கூறினார்.

    எங்கேனும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தால், அவற்றுக்கு பதிலாக பயன்படுத்த இந்த எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே, எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று அவர் கூறினார்.
    ×