search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "execution death"

    நாட்டையே உலுக்கிய ‘நிர்பயா’ வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனே தூக்கில் போட கோரி தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. #Nirbhaya #SupremeCourt #ExecutionDeath
    புதுடெல்லி:

    டெல்லியில் 23 வயதான துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில், கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில், வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து (டிசம்பர் 29) அவர் மரணம் அடைந்தார். அவர் ‘நிர்பயா’ என்ற பெயரால் அறியப்படுகிறார்.

    இந்த கொடிய சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்த கொடிய சம்பவத்தில், டெல்லி போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் ராம்சிங், திகார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ‘நிர்பயா’ வழக்கை விரைவு கோர்ட்டு துரிதமாக விசாரித்தது. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.

    முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு 2014-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டும் உறுதி செய்தன.

    பின்னர் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. அக்‌ஷய் தாக்குர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்ற வக்கீல் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், “நிர்பயா வழக்கில் 3 குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4½ மாதங்கள் ஆகி விட்டன. ஆனாலும் அவர்கள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது மோசமான முன் உதாரணமாக அமைந்து விடும். தினந்தோறும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அவர்களை உடனே தூக்கில் போட உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    மேலும், “பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகிற வழக்குகளில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விரைவாக நிறைவேற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளை வகுத்து அளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனு, நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், மனுதாரரை நோக்கி, “மரண தண்டனை என்பது தடுப்பு நடவடிக்கையாக செயல்படுகிறதா? இத்தகைய வழக்குகளை தாக்கல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால், இப்படிப்பட்ட வழக்குகளை ஏற்காதீர்கள் என்று நாங்கள் பதிவாளருக்கு கூற வேண்டியது வரும்” என கூறினர்.

    மேலும், “ நாங்கள் டெல்லிக்கு போய் இவர்களை தூக்கில் போட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்ன விதமான முறையீட்டை நீங்கள் எங்கள் முன் வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் இந்த கோர்ட்டை தமாஷ் ஆக்குகிறீர்கள்” என கண்டித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.   #Nirbhaya #SupremeCourt #ExecutionDeath
    ×