search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake IAS officer"

    சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த நாவப்பன் (28) என்பவர் எனக்கு அறிமுகமானார்.

    அவர் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சுழல்விளக்கு பொருத்திய சொகுசு காரில் வலம் வந்தார். தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறினார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். வேலைக்கு சேர்ந்ததாகவும், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

    தன்னால் அரசு துறைகளில் வேலை வாங்கி தர முடியும் என்று கூறினார். ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட தொகையை சொல்லி பணம் வசூலித்தார். நானும், எனது நண்பர்கள் 10 பேரும் அரசு வேலைக்காக ரூ.45 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம்.

    அவர் எங்களுக்கு வேலை எதுவும் வாங்கித்தராமல் ரூ.45 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

    போலீஸ் விசாரணையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்த நாவப்பன் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது தெரிய வந்தது. ஏராளமான பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை சுருட்டியிருப்பதும் கண்டறியப்பட்டது.

    போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்த நாவப்பன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவர் வலம் வந்த சுழல்விளக்கு பொருத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தன்னைப் போன்ற இளைஞர்களோடு தவறான உறவு வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    திருமணமாகாத இவர் எம்.ஏ. பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இதுபோல் மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் தலைமை செயலகத்தில் தினமும் வலம்வருவார். அங்குள்ள அதிகாரிகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த புகைப்படங்களை ‘வாட்ஸ்- அப்’பில் அனுப்பி தன்னை ஒரு முக்கியபுள்ளி என்பதுபோல காட்டிக்கொண்டார்.

    கைதான நாவப்பன் மோசடி செய்த பணத்தில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். ஏராளமாக நிலங்களும் வாங்கிப்போட்டுள்ளார். மேலும் உல்லாச வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.

    நாவப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். போலி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நடமாட்டம் சென்னையில் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட போலி ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். எனவே இதுபோன்ற போலி ஆசாமிகளிடம் பொதுமக்கள் ஏமாறவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
    ×