search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fakenote"

    கேரள மாநிலம் இடுக்கியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி அருகே நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் நேற்று முன்பதினம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து தனிப்படை அமைத்து கள்ள நோட்டு கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

    போலீஸ் விசாரணையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தேனியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கூடலூர், தேவாரம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து தேடி வந்தனர்.

    கூடலூரில் ஒரு அறையில் தங்கி இருந்த 2 பேர் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்தது. கூடலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 26) என்பவரும் தேவாரத்தைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் நெடுங்கண்டம் தூக்குப்பாலம் பகுதியில் உள்ள ஒரு பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு ஆட்டோவில் ஏறி தங்களது அறைக்கு வந்துள்ளனர். ஆட்டோ டிரைவரிடமும் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளனர். அவர்கள் 2 பேரும் நெடுங்கண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடினர். இதனையடுத்து அவர்கள் தங்களை தேடுவதை அறிந்து கூடலூருக்கு வந்து விட்டனர்.

    போலீசார் அதிரடியாக சென்று அவர்கள் தங்கி இருந்த அறையில் சோதனையிட்டனர். அப்போது அருண்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதை ஒத்துக் கொண்டார்.

    அவர் அறையில் இருந்து ரூ.7,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கூடலூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பல முறை கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இங்கிருந்து நக்சலைட்டு உள்ளிட்ட தீவிரவாத செயல்களுககு கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து இரு மாநில எல்லை பகுதியில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வந்தனர்.

    தற்போது அதே போல் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்கள் கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பிடிபட்ட அருண்குமாரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×