search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer dead"

    • சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
    • சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.

    முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்த போது பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி பலியானார்.
    • விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.

    டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் பலியானார். இதையொட்டி அரியானா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    • சுவரின் அருகே நின்று ஆடுகளை கட்டிக்கொண்டிருந்த தங்கவேல் மீது கற்கள் சரிந்து விழுந்தது.
    • தகவல் அறிந்து அங்கு பனவடலிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 70). விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள்(65).

    தங்கவேல் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று மாலை கணவன்-மனைவி 2 பேரும் வீட்டின் பின்புறம் தொழுவத்தில் ஆடுகளை கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதில் தொழுவத்தில் மின்னல் தாக்கியதில், ஹாலோ பிளாக் கற்கள் சரிந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் சுவரின் அருகே நின்று ஆடுகளை கட்டிக்கொண்டிருந்த தங்கவேல் மீது கற்கள் சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் அவரது அருகே நின்று கொண்டிருந்த வள்ளியம்மாள் படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்து அங்கு பனவடலிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். உயிரிழந்த தங்கவேல் உடலையும், படுகாயம் அடைந்த வள்ளியம்மாளையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு சென்றார்.
    • வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி (வயது55), விவசாயி.

    இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் பூச்சிப்பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் நேற்று வயலுக்கு வேலைக்கு சென்றார்.

    வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், மாலையில் அவர் வேலை பார்த்த விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பூச்சிப்பாண்டி மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூச்சிப்பாண்டியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விவசாயி பூச்சிப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் இருந்த மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
    • விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் மலையாண்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 46). விவசாயியான இவர் இன்று காலை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு சாட்சி சொல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது ஊரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தெத்தூர் மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்று கொண்டிருந்த போது, 7 காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிவஞானம் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சித்தார்.

    இதற்கிடையே கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை திடீரென்று பாய்ந்து வந்து சிவஞானத்தின் மார்பு பகுதியில் குத்தி சாய்த்தது. இதில் நிலைகுலைந்த அவர் அருகே உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதினார். இதில் நெஞ்சு சிதைந்து சிவஞானம் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்தவர்கள் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

    பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துவரங்குறிச்சி, புத்தானத்தம், கண்ணூத்து, மருங்காபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் அதிக அளவில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன.

    இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் கிராமங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் வரும் சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. விவசாய நிலங்களை காட்டெருமைகள் அழித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

    இது ஒருபுறமிருக்க மணப்பாறை துவரங்குறிச்சி சாலையில் காவல்காரன்பட்டி, எதிர்மேடு உள்ளிட்ட பல இடங்களில் காட்டெருமைகள் குத்தி சிலர் படுகாயமடைந்து உள்ளனர். இதுபோன்ற நிலையில் காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியில் வராமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் கோரிக்கை விடுத்தும் அதற்கு தற்போது வரை தீர்வு காணப்படவில்லை.

    இந்தநிலையில் தான் காட்டெருமை முட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் வனத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வைக்கின்ற மிகப்பிரதான கோரிக்கை இந்த காட்டெருமைகள் விளை நிலங்களுக்குள் புகுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான்.

    ஆனால் கூட்டத்தை முடித்தால் போதும் என்ற நிலையில் இருக்கின்ற காரணத்தினால் தான் இப்படி காட்டெருமைகள் தொடர்ந்து வருவதும், உயிரிழப்பை சந்திக்க வேண்டிய துயர நிகழ்வும் ஏற்படுகிறது.

    தமிழக அரசும், வனத்துறை உயர் அதிகாரிகளும் காட்டு மாடுகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிக்குள் புகுவதை கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தோட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பால்பாண்டி தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.
    • சூர்ய பிரகாஷ் தனது தோட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் அவரது கால் பட்டு தூக்கி வீசப்பட்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மல்லிங்கர் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் சூர்ய பிரகாஷ் (வயது 30). இவருக்கு தேவாரம் மேற்கு மலையடிவாரத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இதற்கு அருகே பால்பாண்டி என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பால்பாண்டி தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

    நேற்று இரவு சூர்ய பிரகாஷ் தனது தோட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் அவரது கால் பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சூரிய பிரகாசுக்கு பிரியங்கா என்ற மனைவியும் 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

    • மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
    • அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முனுசாமி தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

    அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். பின்னர் தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.

    மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    இதனால் விவசாயி முனுசாமி மின்சார டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து அவர் காயம் அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார்.
    • அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம்ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி,திருவதிகை பழைய கடலூர் ரோட்டில் வசித்து வருபர் தியாகராஜன் (வயது72). விவசாயி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் புதுவை தூக்கணாம்பாக்கம் சென்று விட்டு திரும்பி பண்ருட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி ஹவுசிங் போர்டு அருகில் வந்து கொண்டியிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி அவரது மொபட் மீது மோதியதில் இதனால் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மலையையொட்டியுள்ள ராஜாங்கம் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு காட்டு பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மிதித்ததாக தெரிகிறது.
    • மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி ஊராட்சி, முத்துப்பாண்டி பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62), விவசாயி. இவர் தினமும் காலையில் வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி இன்று காலை கணேசன் வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்றார்.

    மலையையொட்டியுள்ள ராஜாங்கம் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு காட்டு பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தோட்ட உரிமையாளர் ராஜாங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி விவசாயியும், உடன் சென்ற அவரது வளர்ப்பு நாயும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    • அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. குறிப்பாக லாரியில் ஏற்றி செல்லப்படும் கரும்புகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் காத்திருக்கிறது.

    மேலும் சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கரும்பு இருக்கிறதா? என்று யானைகள் தேடி வருகிறது.

    இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு யானை கூட்டம் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ்சை விரட்டியது. டிரைவர் சாதுர்யமாக பஸ்சை பின்நோக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இயக்கி யானைகளிடம் இருந்து தப்பித்த சம்பவம் நடந்தது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி தனது தோட்டத்தில் இரவு காவல் பணி மேற்கொண்டார். அப்போது அவரது தோட்டத்துக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற விவசாயி மல்லப்பாவை யானை தாக்கி கொன்றது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் யானை தாக்கி இறந்த விவசாயி மல்லப்பா உடலையும் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போாட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை பிடிப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மனித உயிர்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சின்னதம்பி என்ற கும்கி யானை வனத்துறை லாரி மூலம் ஏற்றப்பட்டு இன்று காலை தாளவாடி பகுதிக்கு வந்தடைந்தது.

    இன்று மாலைக்குள் மற்றொரு கும்கி யானை ராஜவர்தன் கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து 2 கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்க உள்ளனர். ஒற்றை யானையை பிடிக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளதால் தாளவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.
    • இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (70) விவசாயி.

    இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு சித்துமல்லு என்ற மகனும், ரேகா என்ற மகளும் உள்ளனர். மல்லப்பாவுக்கு தர்மாபுரம் என்ற பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இதில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாழை தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது.

    யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார். இன்று காலை மல்லப்பா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வந்து பார்த்த போது அவர் யானை தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் மலைகிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து
    • இதில் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தார்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் அருகில் உள்ள ஜாதிக்கவுண்டன் பட்டியை சேர்ந்த விவசாயி ஜெய்கணேஷ் (வயது 42). இவர் தனது மகன் பாலா (13) உடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    காமலாபுரம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படு காயமடை ந்தனர். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு ஜெய்கணேஷ் உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து சிகிக்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


    ×