search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "file report"

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு 2 மாதம் காலஅவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TNPSCExam
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

    இதன் அடிப்படையில், அந்த தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்த மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முதலில் விசாரித்தார். அப்போது குரூப்-1 தேர்வில் 72 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களது தேர்ச்சி என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டார்.



    மேலும், இந்த வழக்கு பொதுநல வழக்கின் தன்மை உள்ளதால், டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரைத்தார். மேலும், இந்த தேர்வு முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் சிலரை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ், ‘இந்த முறைகேடு தொடர்பாக மொத்தம் 266 விடைத்தாள்கள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையின் 3 பிரிவினர் இதுதொடர்பாக ஆய்வு செய்து, ஒரு பிரிவினர் மட்டும் அறிக்கை கொடுத்துள்ளனர். மீதமுள்ள 2 பிரிவினர் அறிக்கை தந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு புலன் விசாரணையை மேற்கொள்ள முடியும். எனவே, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் காலஅவகாம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘இந்த வழக்கை போலீசார் வேண்டும் என்றே இழுத்து அடித்து வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி.யில், 67 விடைத்தாள்களை காணவில்லை என்றனர். தற்போது 2 தடய அறிவியல் துறையினர் அறிக்கை தரவில்லை என்கின்றனர். இந்த முறைகேடு வழக்கில் ஏற்கனவே 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முறைகேட்டில் பெரிய அளவில் பணம் விளையாடியுள்ளது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் இதுவரை யார் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செயல் மிகப்பெரிய அதிர்ச்சிஅளிக்கிறது’ என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேர்வு முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு காலஅவகாசம் வழங்கினர். போலீசார் 2 மாதங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.  #TNPSC 
    ×