search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Five Districts"

    வைகை அணை நிரம்புவதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Vaigaidam
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது வைகை அணை. பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 71 அடி. இந்த அணை முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலமும், மூல வைகை ஆற்றில் வரும் தண்ணீர் மூலமும் நிரம்புகிறது.



    இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் வைகை அணை உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்ததால் வைகை அணை நிரம்பவில்லை. இந்தஆண்டு தென்மேற்கு பருவ மழை கைகொடுத்ததாலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்த கூடுதல் தண்ணீர் திறந்ததாலும் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

    அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது.

    கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வரு‌ஷநாடு, மயிலாடும்பாறை, கண்டமனூர், கடமலைக்குண்டு, மூலவைகை பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    நேற்றும் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. எனவே அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68 அடியை தொட்டதும் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடி ஆனதும் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். இன்று காலை அணையின் நீர் மட்டம் 66.01 அடியாக இருந்தது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைக்கு 2,510 கன அடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதே நிலை நீர் வரத்து நீடித்தால் அணை ஓரிரு நாளில் நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். #Vaigaidam



    ×