search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Five Great Festivals"

    • மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி கடந்த 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
    • வெற்றி பெறும் அணியினருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடிப் போட்டி கடந்த 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    ஆண், பெண் என இருபிரிவுகளாக நடைபெற்று வரும் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியினருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளார்.

    முன்னதாக கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளை காண தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறும் போட்டி என்பதால் அந்த பகுதியே மின்னொளியால் பகல் போல் காட்சி அளிக்கின்றது. இதைத் தொடர்ந்து கபடிப் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா இன்று (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி அறிவித்தல், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபாடி போட்டி, தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழாவாக நடைபெறுகிறது.

    விழாவுக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்குகிறார். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். விழாவல் ஒன்றிய செயலாளர் சி.ராமசாமி வரவேற்கிறார். விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஜோதிமணி எம்.பி., ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் மாநில, மாவட்ட, நகர, பேரூர், வட்டம், வார்டு, கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.

    நகர செயலாளர் மு.ம.செல்வம், வக்கீல் கிருஷ்ணகோபால் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள். தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகையையொட்டி மணப்பாறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகள், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    ×