என் மலர்
நீங்கள் தேடியது "forest area"
- வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
- ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கபிஸ்தலம்:
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனை மலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மோப்ப நாய்களும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டது.
மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாள பாலத்தில் வனத்துறையினர் சிறுத்தையின் கழிவுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த சிறுத்தை மயிலாடுதுறை கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
பின்னர் குத்தாலம் காஞ்சி வாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எங்கும் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறையில் காணப்பட்டதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாம்மிட்டு சிறுத்தையை தேடி வந்தனர். தற்போது சிறுத்தை அரியலூர்-பெரம்பலூர் எல்லை பகுதியில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் பகுதி உமையாள்புரம் ஊராட்சி, உடப்பாங்கரை கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் கடந்த 13-ந் தேதி மாலை 7 மணியளவில் தனது பருத்தி வயலில் தண்ணீர் பாய்ச்சும் போது சத்தம் கேட்டு பார்த்த போது சிறுத்தை சென்றதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவரது வயலில் அண்டகுடி கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தை சென்றதாககால் தடம் எதுவும் இல்லை எனவும், புல்வெளிகள் மிகுந்த பகுதியாக இருப்பதாகவும், தெரிவித்தனர்.
மேலும் இந்த இடங்களை பார்வையிட்ட வனத்துறையினர் உமையாள்புரம், உடப்பாங்கரை, திருமண்டங்குடி, கூனஞ்சேரி, ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சிறுத்தை என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
- சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி, சென்னாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு. இந்த சமயங்களில் சாலையில் சிறிது நேரம் நின்று சாலையோரம் உள்ள மூங்கில் தூரிகளை உடைத்து சுவைத்து விட்டு செல்லும்.
கடந்த 4 நாட்களாக மேற்கு மலை தாளக்கரை பகுதி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையிலேயே நடந்து சென்றும், அந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை சுவைத்தும் சாலையில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பகல் நேரத்தில் நடந்து உலா வருவதாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஒற்றை யானையால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றும் வனப்பதிக்குள் யானை சென்ற பிறகு சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வனவிலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம். எனவே இருசக்கர வாகனத்திலும். 4 சக்கர வாகனத்திலும் செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் செல்ல வேண்டும், மேலும் சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் மரம், காடுகளின் பரப்பளவை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு 1.31 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னை:
இந்திய வரைபடத்தின் கடை கோடியில் உள்ள தமிழ்நாடு வளமான காடுகளை கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கடற்கரைகளை இயற்கையாக பெற்றுள்ளது. மனிதனின் வாழ்க்கை முறை என்பது தாவரம், விலங்குகள் மற்றும் உயிர் சூழல் அமைப்பு ஆகியவற்றோடு தவிர்க்க இயலாதவாறு பின்னி பிணைந்துள்ளது.
எனவே சூழலியல் சமன்பெறுவதற்கு நிலம், நீர், காடுகள் மற்றும் பல்லுயிரின பெருக்கம் ஆகியவற்றை பாதுகாத்து, மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும். பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் மரம் மற்றும் காடுகளின் பரப்பளவை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் செடிகள் நடவு செய்து வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர், தமிழ்நாட்டில் உள்ள மொத்த வனப்பரப்பு எவ்வளவு?, இது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம்? என்று கேட்டிருந்த கேள்விக்கு, "இந்த விவரம் தொடர்பாக எந்த அறிக்கையும் இல்லை" என்ற அதிர்ச்சி தகவலை பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.
தீவிர காடு வளர்ப்பு திட்டத்துக்கு இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு, பசுமை தமிழ்நாடு இயக்கத்துக்கு ரூ.37½ கோடி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ரூ.30 கோடி, தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.4.37 கோடி, கடற்கரைகளில் உயிரி கவச முறையை செயல்படுத்த ரூ.15.16 கோடி, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, இந்த ஆண்டு எவ்வளவு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது? என்ற வினாவுக்கு, 1.31 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவித்துள்ளது.
- குட்டி யானை சாலையில் வந்த ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் சென்று வழிமறித்தது.
- குட்டி யானை அடிக்கடி பிளிறியடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியது.
திருவனந்தபுரம்:
குழந்தைகள் செய்யக் கூடிய சுட்டித்தனம் பார்ப்பதற்கு அழகாகவும், ரசிக்கும் விதமாகவும் இருக்கும். அது மனித இனத்தில் மட்டு மல்லாது, விலங்கிலத்திலும் நடக்கும். அதுவும் பார்ப்பதற்கு ரசிக்கும் விதத்தில் இருக்கும்.
இதன் காரணமாகத்தான் பலர் தங்களின் வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வளர்க்கிறார்கள். சிறிதாக இருக்கும் போது அவை செய்யக்கூடிய சுட்டித தனத்தை ரசித்து பார்ப்பது மட்டுமின்றி, அவற்றின் மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து வளர்க்கிறார்கள்.
என்னதான் சுட்டித்தனம் செய்தாலும் தாயை தேடும் குழந்தைகள் போன்று, விலங்கினங்களும் தாயின் அரவணைப்பைத் தான் விரும்பும். இதனால் தான் விலங்கினங்கள் சிறிதாக இருக்கும் போது தாயை சுற்றிச்சுற்றி வந்தபடி இருக்கும். அப்படி இருக்கும் போது தாய் எங்காவது சென்றுவிட்டால் குட்டிகள் தவித்து விடும். அதனைப் போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு திருநெல்லி தோள்பேட்டை பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வனத்தில் இருந்து நேற்று ஒரு குட்டி யானை, தாயை பிரிந்து வழி தவறி அந்த பகுதியில் உள்ள சாலைக்கு வந்து விட்டது. அந்த குட்டி யானை சாலையில் வந்த ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் சென்று வழிமறித்தது.
பின்பு அந்த வாகனத்தை சுற்றிச்சென்று தனது தாயை தேடியபடி இருந்தது. பஸ், கார், உள்ளிட்ட எந்த வாகனத்தையும் அந்த குட்டி யானை விடவில்லை. அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்திவிட்டு, வாகனத்ததை சுற்றிச்சென்று தனது தாயை தேடியபடி இருந்தது.

மேலும் அந்த வாகனங்கள் கிளம்பி சென்ற போது, பின்னால் வெகு தூரம் துரத்திக் கொண்டு ஓடியது. தான் இருப்பதை தாய்க்கு காண்பிப்பதற்காக அந்த குட்டி யானை அடிக்கடி பிளிறியடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியது.
அதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் குட்டி யானையின் தவிப்பை பார்த்து பரிதாபப் பட்டனர். சிலர் அதற்கு சாப்பிட உணுவ பொருட்களை கொடுத்தனர். ஆனால் அந்த குட்டி யானை அதனை சாப்பிடாமல் தனது தாயை தேடியபடியே இருந்தது.
குட்டி யானை ஒன்று சாலையில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தி நிதானமாக ஓட்டிச் சென்றனர். வெகு நேரத்திற்கு பிறகு அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து தவித்து வருவது பற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தாயை பிரிந்து தவித்துவரும் குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர். அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தாய் யானையை பிரிந்து வந்த குட்டி யானை, சாலையில் வாகனங்களை மறித்து தாயை பரிதவிப்புடன் தேடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
- தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக திம்பம், தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் மழை பரவலாக பெய்து வருவதால் வனப்பகுதியில் பசுமையான சூழ்நிலை உள்ளது. மரம், செடி, கொடிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் இருந்து குத்தியாலத்தூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குத்தியாலத்தூரில் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து ஒரு புலி மற்றொரு வனப்பகுதிக்கு சென்றது.
இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைத்தனர். பின்னர் தங்களது வாகனங்களை சிறிது தூரம் முன்பே நிறுத்தி விட்டனர். அந்த புலி மெதுவாக சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடமாடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
புலி வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது குத்தியாலத்தூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் சொல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.
- அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
- காடும், மரங்களும் சேர்ந்துதான் பசுமைப் போர்வையை கட்டமைக்கிறது.
சென்னை:
2023-ம் ஆண்டுக்கான இந்திய மாநில வன ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 683.62 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 30 சதுர கி.மீ. வனப் பரப்பை அதிகமாக கொண்டிருப்பது பட்டியலில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் ஒட்டுமொத்த பரப்பான 1,30,060 சதுர கி.மீட்டரில், 26,419 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்கள் பரப்பை கொண்டிருந்தது.
அதுவே 2023-ம் ஆண்டில் 1,30,060 சதுர கி.மீட்டரில், 26,450.22 சதுர கி.மீ. வனம் மற்றும் மரங்கள் பரப்பை கொண்டிருக்கிறது. அதில் 3,586.19 சதுர கி.மீ. அடர் வனப்பகுதி, 11,027.03 மிதமான வனப் பகுதி, 11,837 சதுர கி.மீ. திறந்த வனப்பகுதி வருகிறது. இவை அனைத்தும் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் இது 20.34 சதவீதம் ஆகும். கடந்த ஆய்வு அறிக்கையுடன் தற்போதைய ஆய்வை ஒப்பிட்டு பார்க்கையில், 30.99 சதுர கி.மீ. வனப்பரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து இருப்பது தெரியவருகிறது.
ஒட்டுமொத்த வனப்பரப்பு அதிகரித்து இருந்தாலும், பசுமைப் போர்வையை கணக்கிடும் போது தமிழ்நாட்டில் குறுகி வருவது ஆய்வில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காடும், மரங்களும் சேர்ந்துதான் பசுமைப் போர்வையை கட்டமைக்கிறது. அந்தவகையில் பசுமைப் போர்வை என்பது 13.97 சதுர கி.மீ. அளவுக்கு கடந்த 2021-ம் ஆண்டைய ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களைவிட குறைந்து காணப்படுகிறது.
- டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
- பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரக மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கடம்பூர் மலை குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது, இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் நாடு சிறப்பு இலக்குப் படை இணைந்து டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் வனச்சோதனை சாவடி முதல் கடம்பூர் வரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், வனச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீச வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டிஎன்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.
இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.