search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Four Constituency by election"

    4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது. மே 2-ந் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகிறது. #TNAssemblyElection
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை வேட்பாளர்களை அறிவித்தது.

    அ.தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் கந்தசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி, ஓட்டப்பிடாரத்தில் மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    கடந்த 26-ந் தேதி வரை மொத்தம் 98 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது.



    எனவே அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மே 2-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மே 1-ந் தேதி சூலூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார். 4 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அதேபோன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனும் 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்த 4 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மே 23-ந் தேதி நடைபெறுகிறது. #TNAssemblyElection
    ×