search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "France company announcement"

    ரபேல் விமான பேரத்தில் ஊழல் இல்லை என பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

    ஆனால் ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    சமீபத்தில் டெல்லியில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பு கொண்ட அனில் அம்பானியின் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் ரூ.284 கோடி முதலீடு செய்துள்ளது. நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கிற ஒரு நிறுவனத்தில் அவர்கள் எதற்காக ரூ.284 கோடியை முதலீடு செய்ய வேண்டும்? டசால்ட் நிறுவனம் லஞ்சமாக கொடுத்த பணத்தின் பல பகுதிகளில் இதுவும் ஒரு பகுதி” என குறிப்பிட்டார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பொய் சொல்லவில்லை. நான் இதற்கு முன் தெரிவித்த உண்மைகள், அளித்த வாக்குமூலங்கள் யாவும் உண்மைதான். தலைமை செயல் அதிகாரியாக இருந்து கொண்டு நான் பொய் கூற மாட்டேன்.

    ரபேல் போர் விமான பேரத்தில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளன என்பது எனக்கு தெரியும். இது உள்நாட்டு அரசியல் சண்டை என்பதையும் நான் அறிவேன். எனக்கு உண்மைதான் முக்கியம். ரபேல் விமான பேரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இது ஒரு தூய்மையான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைந்துள்ளது.

    என் மீதும், எங்கள் நிறுவனத்தின் மீதும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ள புகார்கள் வேதனை அளிக்கின்றன.

    காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு. எங்கள் முதல் பேரம், 1953-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது அமைந்தது. பின்னர் பிற பிரதமர்களுடனும் ஏற்பட்டது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறோம்.

    எந்த கட்சிக்காகவும் நாங்கள் வேலை பார்க்கவில்லை. நாங்கள் இந்திய விமானப்படைக்கும், இந்திய அரசுக்கும்தான் போர் விமானங்கள் போன்ற தளவாடங்களை வினியோகம் செய்கிறோம். இது மிகவும் முக்கியமானது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள்தான் தேர்வு செய்தோம். ரிலையன்ஸ் தவிர்த்து எங்களுடன் 30 கூட்டாளி நிறுவனங்கள் உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாங்கள் பணம் தரவில்லை. கூட்டுத்திட்டத்துக்குத்தான் பணம் போகிறது.

    டசால்ட் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் என்னிடம் உள்ளனர். தொழிலாளர்களும் இருக்கின்றனர். இந்த பேரத்தில் முக்கிய இடம் வகித்து, முன்னின்று நடத்துவது டசால்ட் நிறுவனம்தான்.

    இந்த கூட்டு திட்டத்தில் ரிலையன்ஸ் போன்று வேறு ஒரு இந்திய நிறுவனம் பணம் போடுகிறது. தங்கள் நாட்டை வளர்ச்சி அடையச்செய்வதுதான் அவர்களது நோக்கம். எனவே அந்த கம்பெனி, விமானம் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளப்போகிறது.

    36 ரபேல் போர் விமானங்களின் விலையானது, பறப்பதற்கான தயார் நிலையில் உள்ள 18 விமானங்களின் விலையுடன் ஒப்பிடுகையில் மிகச்சரியானதுதான். 36 என்பது 18-ன் இரு மடங்கு. எனவே விலையும் இரு மடங்கு ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் இரு நாட்டு அரசுகள் இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. நானும் விலையை 9 சதவீத அளவுக்கு குறைத்தேன்.

    36 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் பறப்பதற்கு தயார் நிலையிலான 18 விமானங்களுக்கான விலை, முதலில் திட்டமிட்டிருந்தபடி 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை விட குறைவுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா பதில் அளித்தார்.

    இதுபற்றி அவர், “உத்தரவிட்ட பேட்டிகளும், ஜோடிக்கப்பட்ட பொய்களும் ரபேல் ஊழலை நசுக்கி விட முடியாது. முதலில், பரஸ்பர பயனாளிகள், கூட்டு குற்றவாளிகள் வாக்குமூலங்களுக்கு மதிப்பு கிடையாது. இரண்டாவது, பயனாளிகளும், குற்றவாளிகளும் தங்கள் வழக்கில் தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது. உண்மை வெளியே வர ஒரு வழி இருக்கிறது. பாரதீய ஜனதா அரசும், டசால்ட் நிறுவனமும் ஆட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுள்ளன. இப்படியாக, பிரதமர் மோடியின், எரிக் டிராப்பியரின் மக்கள் தொடர்புகள் வழியாக அப்பட்டமான ஊழலை மறைத்து விட முடியாது” என கூறி உள்ளார்.
    ×