search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free materials"

    பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசப்பொருட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    தர்மபுரி:

    தர்மபுரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், வணிகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

    சினிமாத்துறையில் இருந்த நான் யதார்த்த வாழ்வியலை நம்பி அரசியலில் இறங்கி உள்ளேன். அதுவும் மக்களாகிய உங்களை நம்பிதான் களத்திற்கு வந்துள்ளேன். நிச்சயம் நீங்கள் என்னை கரை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். வணிகர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. நீங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தால் நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    தீவிர மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது கடினம். படிப்படியாகத்தான் மதுவிலக்கை கொண்டு வர முடியும். ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஆங்காங்கே உள்ள ஏரிகள், குளங்களை பொதுமக்களே ஒருங்கிணைந்து தூர்வார முன் வர வேண்டும். அவற்றில் குப்பைகளை கொட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

    உழைக்கும் மக்களின் பணம் தான் அரசின் கஜானாவை நிரப்புகிறது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் எடுத்து காலி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. மக்களின் பணத்தை ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை தேர்தலின்போது ஓட்டுக்களை பெறுவதற்காக மக்களுக்கே திருப்பி கொடுக்கும் கலாசாரம் பரவி விட்டது.

    இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர மக்கள் நீதி மய்யம் போராடும். பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை. உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம். இந்த கொள்கைக்கு பொதுமக்கள் உரிய ஆதரவு அளிக்க வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக தனிப்படை அமைக்க உள்ளோம். அந்த படையில் பொதுமக்களையும் இடம்பெற செய்வோம்.

    தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்று தெரியவில்லை. 2 தொகுதிக்கு மட்டும் முதலில் தேர்தல் நடத்துவார்களா? அல்லது 20 தொகுதிகளுக்கும் சேர்த்து நடத்துவார்களா? நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்துவார்களா? என்பது தெரியவில்லை.



    இதேபோல் உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்பதும் தெரியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் நீதி மய்யம் நிச்சயமாக போட்டியிடும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    ×