search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free van facility"

    ஊத்துக்குளி அருகே பாரப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    ஊத்துக்குளி அருகே பாரப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இது மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்யப்பட்ட புது யுக்தி என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில மோகம் காரணமாக, பெற்றோர் தங்களது குழந்தைகளை மெட்ரிக்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். அரசுபள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி கொண்டு வந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. எனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத்தில் உள்ள பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புது யுக்தியை கையாண்டுள்ளனர். அந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் 247 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமையாசிரியையாக அகிலா பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் பாரப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் நீண்ட தூரம் நடந்து வந்து படித்து வருகிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவ-மாணவிகளின் சிரமங்களை குறைக்கவும் இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஊத்துக்குளி வட்டார கல்வி அதிகாரி வசந்தி, தலைமையாசிரியை அகிலா மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியை அகிலா கூறியதாவது:-

    எங்கள் பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் இருந்து மட்டும் 70 மாணவ-மாணவிகள் இங்கு வந்து படித்து வருகிறார்கள். இவர்கள் வீட்டிலிருந்து தினசரி காலை 8 மணிக்கே கிளம்பி, புத்தகப்பையை தோளில் மாட்டிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடந்து வருகிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்து வரும் இவர்கள் பள்ளிக்கு வந்து சேரும் போது மிகவும் சோர்வடைந்து விடுகிறார்கள்.

    இதனால் இவர்களின் சிரமத்தை போக்க பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைகுழு, தன்னார்வலர்கள், அன்னையர்குழு, தலைமையாசிரியர், கல்வியாளர்கள், முகநூல் நண்பர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரின் பங்களிப்புடன் குளத்துப்பாளையத்தில் இருந்து பாரப்பாளையத்தில் உள்ள பள்ளி வரை செல்ல வேன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். காலையில் இந்த வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்படும் மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்தவுடன் அதே இடத்தில் கொண்டுபோய் இறக்கி விடப்படுவார்கள். இதற்கான வாடகை கட்டணத்தை அந்த குழுவினரே செலுத்திவிடுவார்கள். இந்த ஆண்டு 80 மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ள நிலையில் இதனால் மாணவர் சேர்க்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×