search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Full Moon"

    • பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது.
    • பித்து பிடித்தவராக அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    சிவபெருமானுக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையிலே பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது. அதை ஏந்திய நிலையில் பித்து பிடித்தவராக கிளம்பி அகிலமெல்லாம் அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    கபாலம் நீங்காத நிலையிலுள்ள சிவபெருமான் தண்டகாருண்யம் வழியாக செஞ்சி மாநகர் வந்து சேர்ந்தார்.

    செஞ்சியில் உள்ள மக்கள் கபாலம் நீங்க சங்கரனுக்கு 32 வித அபிஷேகங்களெல்லாம் செய்தார்கள். அப்போதும் அது நீங்கவில்லை. அந்த அபிஷேக நீர் சென்றதை தான் சங்கராபரணி ஆறு என்று சொல்லுகின்றார்கள்.

    செஞ்சியில் உள்ள மக்கள் பலரும் தாங்கள் மலையனூர் சென்றால் கையில் உள்ள கபாலம் நீங்கி விடும் என்று சொல்ல, அதை கேட்ட சிவபெருமான் அப்போதே மலையனூர் செல்ல வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் உடனே மலையனூருக்கு வந்து சேர்ந்தார்.

    சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார். சிலநாட்கள் இங்கே தங்கியிருந்தால் தமது உடல்நிலை நன்றாகும் என்று நினைத்தார். மேலும் இங்கே நடப்பதை பார்க்கும் போது பல வகையில் நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு பிச்சை எடுத்தார். அதை கபாலம் சாப்பிட்டது. சுடலைக்கு சென்று சாம்பலை உண்டார். அவருடைய பசியும் தீர்ந்தது.

    சிவனாரின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி மாயவன் மாயமாளிகை ஒன்றை ஏற்படுத்தினார். மாளிகையை கண்ட சிவபெருமான் அங்கே போய் உறங்கலாமே என்று எண்ணி, மாளிகையின் வாசலிலே போய் நின்று, ''அம்மணி! பிச்சை! பர்வதா! பிச்சை! அன்னதாய்! அம்மணி!'' என்று பலமுறை குரல் கொடுத்தார்.

    அந்த குரல் கேட்டவுடன் பார்வதி தேவியார் துடித்து போனார். வந்திருப்பது தன் கணவர் என்று தெரிந்து கொண்டார். பிறகு வெளியே வந்து பார்த்தார். ''சுவாமி! சற்று பொறுங்கள் நான் கொடுக்கன் குப்பம் சென்று இப்போது தான் வந்தேன். உடனே சமையல் செய்து போடுகிறேன். சற்று அமருங்கள்!'' என்று சொல்லி வடக்கு வாயிற்படியில் திண்ணையிலே அமரச் செய்தார். அவரும் திண்ணையிலே போய் அமர்ந்தார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் பிறகு விநாயகரை அழைத்து, ''மகனே! நீ இவரை கவனமாக நின்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறார். நீ உட்கார்ந்திருந்தால் உறங்கிவிடுவாய்.

    அதனால் உனக்கு நிற்க சக்தி கொடுக்கிறேன். நீ நின்று காவல் செய்!'' என்றாள். விநாயகரும் காவல்காத்து நின்றார். அவர் தான் வடக்கு வாயிற்படி மேற்புறம் நிற்கும் சக்தி விநாயகர்.

    திண்ணையிலே அமர்ந்திருக்கும் சிவனாருக்கு உறக்கம் வந்தது. அமர்ந்திருந்த திண்ணையிலே படுத்துறங்கிவிட்டார்.

    சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

    சிவபெருமான் சிறிது நேரம் உறங்கிவிட்டு தாகம் எடுக்க நீர் வேண்டி மயானத்திற்கு சென்றார். உள்ளே சென்ற பார்வதி தேவியார் ஆபத்சகாயரான விஷ்ணுவையும் லட்சுமியையும் இப்பொழுது வரவேண்டும் என்று வேண்டினாள்.

    எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதால் கோபாலனையே, இங்கே விநாயகர் பெருமானாக அமர்த்தியுள்ளார். அவர்தான் மேற்கு வாயிற்படியில் வடபுறம் அமர்ந்திருக்கும் கோபால விநாயகராவார்.

    பார்வதி தேவியார் அழைப்பை ஏற்று விஷ்ணுவும், லட்சுமியும் உடனே வந்தார்கள். அவர்களிடம் அன்னையார், ''என் கணவன் கையில் இருக்கும் கபாலம் நீங்க சீக்கிரம் ஒருவழி சொல்லுங்கள்'' என்றார்.

    இதற்கு பகவான் விஷ்ணு, ''பார்வதி, மகாலட்சுமி இடத்திலே உள்ள அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த பிரம்ம கபாலத்திற்கு போடவேண்டும்.

    அப்படி போடும் போது, உணவுகளை மூன்று உருண்டைகளாக செய்து, முதல் இரண்டு உருண்டைகளை கபாலத்திலே போட வேண்டும். மூன்றாவது உருண்டையை இறைக்க வேண்டும். மற்றவைகளை நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும் என்றார்.

    உடனே அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு கிழக்குவாசல் வழியாக காவல் தெய்வமான பாவாடைராயன் வீரபத்திரனுடன் பார்வதி அமாவாசை இரவு நடுநிசியிலே சென்றாள். அவர்களை பாதுகாக்க விஷ்ணுவும் உடன் சென்றார்.

    சிவனார் மயானத்திலே எலும்புகளை கடித்து நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு பார்வதி தேவியார் வந்து சேர்ந்தார். சிவனாரின் கையிலே உள்ள கபாலத்திற்கு முதல் உணவு உருண்டையை போட்டார். கபாலம் பசிமிகுதியால் சாப்பிட்டது. இரண்டாவது உணவு உருண்டையை போட்டார்.

    அதையும் ருசிமிகுதியால் சாப்பிட்டது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 3-வது உருண்டையை போடுவது போல பாவனை செய்தாள். பிரம்ம கபாலம் அதை சாப்பிட ஏங்கி நின்றது. அது ஏங்கி நிற்பதை பார்வதி பார்த்து விட்டாள். போடுவது போல பாவனை செய்து தூக்கி இறைத்தாள்.

    ருசி மிகுதியாக இருக்கவே கபாலம் பிரம்மன் கொடுத்த சாபத்தையும் மறந்து சிவபெருமானை விட்டுவிட்டு உணவுகளை பொறுக்கித் தின்றது. இந்த நிகழ்ச்சியை தான் அகிலமெங்கும் மயான சூறை என்று கொண்டாடுகிறார்கள்.

    • அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும்.
    • பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் தீய சக்திகள் வீட்டுக்குள் அண்டாது.

    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் தங்களது கையில் எலுமிச்சையை பழங்களாகவும் மாலையாகவும் கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவிலின் முன்பு எலுமிச்சை பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    எலுமிச்சை பழத்தில்தான் அதிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. எலுமிச்சை பழத்தை அம்மனின் காலில் வைத்து வழிபட்டு செல்லும் பக்தர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது.

    மேலும் பலர் எலுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அங்காளம்மன் கோவிலை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் மாலைகளை வாங்கிக் கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோவிலில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சை பழங்களாக காட்சி அளிக்கும்.

    பேய், பிசாசு, பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை பழம் பயன்படுகிறது. இவர்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை கோவிலின் முன்பு கொண்டு செல்கிறார்கள்.

    அங்கு நிற்கும் பூசாரியிடம் வழங்குகிறார்கள். அவர் அந்த எலுமிச்சை பழத்தை கையில் வாங்கிக் கொண்டு பூஜித்து அதனை கொடுத்த பக்தர்களின் தலையை 3 முறை சுற்றி காலால் மிதிக்கும் படி கூறுகிறார். அதன்படி பக்தர்கள் அந்த எலுமிச்சை பழத்தை காலால் மிதித்து செல்கிறார்கள்.

    இதனால் அவர்கள் உடலில் புகுந்திருந்த கெட்ட ஆவிகள் பறந்து விடுகிறது. பில்லி, சூனியமும் விரட்டப்படுகிறது. இதனால் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.

    • தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடம் பலிபீடம்.
    • சித்திரை , மார்ச் மாதத்தில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது.

    ஆதி சக்தி அம்மன் தன் அம்சமான தாட்சாயணி தேவியாக தட்சனுக்கு மகளாக பிறந்தாள் என்றும் ஆணவத்தின் அகங்காரத்தின் தலைக்கணத்தின், இறுமாப்பின், திமிரின் உச்சக்கட்டமாக தக்கனை ஒப்பிடுகையில் அத்தக்கனின் முழு உருவத்தை ஆடாக உருவப்படுத்தியும், அதே முறையில் ஆணவம், அகங்காரம், தலைக்கனம், திமிர் இறுமாப்பின் அனைத்து நிலை உருவமாக சூரபது மனை உருவகப் படுத்தும்போது சூரபதுமன் ஒரு பாதி மயிலாகவும், ஒரு பாதி சேவலாகவும் நின்றது அறிந்ததே!

    இவ்வகையில் அகந்தை, அகங்காரம், திமிர், தலைக்கணம், ஆணவத்தின் தோற்ற உருவாக கோழியையுமே பலியிட்டு வணங்கி இருக்கின்றனர்.

    ஆடு, கோழியின் உருவமான தட்சன், சூரபதுமன் போன்ற அரக்க செயல் கொண்ட ஆணவம், அகந்தை, திமிர், தலைக்கணம், இறுமாப்பு போன்ற தீய குணங்களை திருக்கோவிலின் பலிபீடத்தில் பலியிட்டு வழிபாட்டை தொடங்க கோவிலுக்கு உள்ளே தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடமே பலிபீடம் ஆகும்.

    ஆனால் வழிபாட்டில் தவறான கருத்தாக ஆடு, கோழியைப் பலியிடும் இடமாகவே கருதப்படுவதாகவே ஆதி முதல் பலிபீடம் இருந்ததாகவே! தவறான கருத்தாக கொள்ளப்பட்டு இருந்தது.

    பலிபீடம் என்பது, தக்கன், சூரபதுமன் என்ற மகா அரக்கர்களின் குணநலன்கள் எந்த ஒரு குடும்பத்தாரையும் அடையாமல் இருக்கவும் குடும்ப நபரை அடைந்த அந்த குணநலன்களையும், வழிபாட்டுக்கு முன்பாகவே பலி பீடத்தில் பலியிட்ட பின்னரே வழிபட செல்வதாகவே படைக்கப்பட்ட இடமே திருக்கோவில் பலிபீடம் என்பது தெளிவாக உள்ளது.

    ஊரை சுற்றி வரும் சக்தி கரகத்தின் சிறப்பு

    அங்காளபரமேஸ்வரி கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    அங்காளபரமேஸ்வரி சக்தி கரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்க்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கட்டை தானியம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள்.

    ஏன் என்றால் அங்காளம்மன் பித்து பிடித்த தனது கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவானது.

    சக்தி கரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

    • ஆண், பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.
    • ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும்.

    ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக்கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண், பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.

    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக்கொள்ளும் நாள் அமாவாசை.

    இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூறையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.

    இந்த நேரங்களில் அங்காளம்மன் கோவிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.

    அங்காளம்மன் என்ற இந்த தொன்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    அமாவாசை தோறும் இந்த கோவிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.

    • திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள்.
    • பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகும்.

    1. அங்காளபர மேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

    2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் 4 திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

    3.நான்கு கரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிளம்பு உள்ளது.

    4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

    5. கோவிலுக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

    7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

    8. இக்கோவிலில் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும்போது அவ்வப்போது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

    9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

    11. கோவிலின் தெற்கு பகுதியில் மல்லாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

    12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாடானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

    14. இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பவுர்ணமி தினங்களில் ஆலயம் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுகிறது.

    16. சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

    17.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

    18.ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    19.எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

    21. மயானத்தில் அன்னையை ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள். இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

    • ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது' என்று அர்த்தமாகும்.
    • புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும்.

    ஒரு ஊருக்கு பெருமை தருவது, அந்த ஊரில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் தெய்வமே. அந்த மூர்த்தி தினமும் புனித நீராட உதவுவது தீர்த்தம் எனப்படும் திருக்குளமாகும்.

    இதனால்தான் ஒரு ஆலயம் என்று எடுத்துக் கொண்டால் `மூர்த்தி, தலம், தீர்த்தம்' மூன்றையும் உன்னிப்பாகப் பார்ப்பார்கள். இந்த மூன்றும் சிறப்புற அமைந்துள்ள ஆலயம் எல்லா வகையிலும் சிறப்பு பெற்று தனித்துவத்துடன் திகழும்.

    `மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றை முறையாய் வணங்குவோர்க்கு வார்த்தை சொல்ல குரு வாய்க்கும் பராபரமே' என்று தாயுமான சுவாமிகள் பாடியுள்ளார். எனவே ஒரு ஆயலத்தில் மூர்த்திக்கு இணையான சிறப்பும், மகிமையும் தீர்த்தத்துக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டில் 90 சதவீத பக்தர்கள் திருக்குளங்களை கண்டு கொள்வதே இல்லை. அவற்றுக்கு உரிய மரியாதையையும் கொடுப்பது இல்லை. மாறாக புனித தீர்த்தங்களை மாசுபடுத்துகிறார்கள்.

    இதனால் தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் திருக்குளங்கள் நல்ல நிலையில் இல்லை. ஒரு கோவிலுக்கு சென்றால் அங்குள்ள புனித நீரில் நீராட வேண்டும். கை, கால், அலம்பி, வாய் கொப்பளித்து, ஆசமனம் செய்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

    ஆனால் ஆலய திருக்குளங்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய நிலையிலா உள்ளன? சில ஆலயங்களில் மட்டுமே தீர்த்தப்பகுதி நன்கு பேணப்படுகிறது. அந்த ஆலய தீர்த்தங்கள் மிக, மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தண்ணீரில் இருந்துதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தோன்றின. தண்ணீர்தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாக உள்ளது. `நீரின்றி அமையாது உலகு'. திருவள்ளூவர் சொன்னது இதனால் தான்.

    இத்தகைய சிறப்பு மிக்க தண்ணீரை ஆன்மீகவாதிகள் `தீர்த்தம்' என்று உயர்வாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மரபு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

    சங்க காலத்துக்கும் முன்பே தண்ணீர் பிரவாகமெடுத்து வரும் நதிகளை, வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமில்லாமல், அவற்றை தெய்வமாக கருதி வழிபடும் வழக்கம் இருந்தது. அதுவும் ஒவ்வொரு நதிக்கும் ஒரு பெயரிட்டு போற்றி வழிபட்டனர்.

    அதோடு இந்த புனித நதிகளை ஜீவநதி என்று சொன்னார்கள். ஜீவ நதி என்றால் `நதிகளுக்கு உயிர் இருக்கிறது' என்று அர்த்தமாகும்.

    குறிப்பிட்ட நாட்களில் நதிகளில் புனித நீராடினால் நோய்கள் குணமாகும். மூளை சுறு சுறுப்பாக செயல்படும். உடலுக்கு புதுதெம்பு கிடைக்கும்.

    சில நதிக்கரைகளில் நம் கண்ணுக்குப் புலப்படாத மகான்கள், முனிவர்கள், சித்தர்கள் கடும் தவம் இருப்பார்கள். அவர்களது தவ வலிமையின் சில துகள்கள் நதி தண்ணீரில் பரவி வரும். அந்த நதியில் நாம் புனித நீராடும் பாக்கியம் கிடைத்தால் நமது இந்த பிறவியில் மட்டுமல்ல முந்தையப் பிறவிகளிலும் சேர்ந்த பாவ மூட்டைகள், தோஷங்கள் நம்மிடம் இருந்து விலகி ஓடிவிடும்.

    நாம் ஒரு புது மனிதனாக நம் ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள முடியும். பவுர்ணமி தோறும் நதிகளில் புனித நீராடினால் இந்த அபூர்வ பலன் நிச்சயம் கிடைக்கும்.

    தியில் புனித நீராடுவதற்கு என்று சில நியதிகள் உள்ளன. எப்போதும் ஓடும் நதியில் நீராடுவதே நல்லது. நதி எங்கிருந்து உற்பத்தியாகி வருகிறதோ, அந்த திசை நோக்கி நீராடுதல் வேண்டும்.

    இரவு நேரங்களில் நீராடும் போது கிழக்கு திசை நோக்கி கும்பிட்டு நீராடுவது நல்லது. வடக்கு நோக்கியும் வணங்கி நீராடலாம்.

    நதிகளில் நீராட தொடங்கும் முன்பு முதலில் காலை நீட்டி இறங்கக் கூடாது. நதியில் கால் பதிக்கும் முன்பு தலையில் அந்த புனித நீரை எடுத்துத் தெளித்துக் கொள்ள வேண்டும்.

    அது நமது உடல் உஷ்ண நிலையை, நதியின் நீர் நிலைக்கு ஏற்ப மாற்றும். அதன் பிறகே நதியில் கால் வைக்க வேண்டும். கடவுளை நினைத்தப்படி புனித நீராட வேண்டும்.

    தீர்த்தமாடல் என்பதற்கு பரிசுத்தம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. நாம் நதிகளில் தீர்த்தமாட, தீர்த்தமாட நாம் பரிசுத்தமாகி விடுவோம். இதை அடிப்படையாகக் கொண்டே ஆலயங்களில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஏராளமான நதிகள் உள்ள போதிலும் புனித தீர்த்தமாடுவதற்கு மிகவும் ஐதீகமானதாக காவிரி, தாமிரபரணி நதிகள் கருதப்படுகின்றன. இந்த நதிகளில் பல இடங்களில் தீர்த்த கட்டங்கள் உள்ளன.

    காவிரி நதி எந்த ஊரையெல்லாம் தொடுகிறதோ, அங்கெல்லாம் தீர்த்தக் கட்டம் இருக்கும். தாமிரபரணி நதியில் பானை தீர்த்தம், நாதாம்புஜம் (சேரன் மகாதேவி) பிரமாரணியம், (ஸ்ரீவைகுண்டம்) ராமபுரம் (ஆழ்வார் திருநகரி) கோட்டீசுவரம் (ஊர்க்காடு) வேனுவனம் (நெல்லை) நதிப்புரம் (ஆத்தூர்) என பல தீர்த்த கட்டங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்கள் எல்லாம் இம்மைக்கும், மறுமைக்கும் நற்கதி அளிக்க வல்லவை.

    சில தீர்த்தங்கள் நோயில் இருந்து நம்மை காப்பாற்றக் கூடியவை. சில நம் வாழ்வில் வளம் சேர்க்கும். சில தீர்த்தங்கள் பித்ரு பூஜை செய்ய உதவுகின்றன. பொதுவாக பார்த்தால் இந்த தீர்த்தங்களை அதன் சிறப்பை உணர்ந்து பயன்படுத்தினால் நாம் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    மனிதனை பக்குவப்படுத்தும் தீர்த்தங்கள் நதிகளில் மட்டுமல்ல மலைகளிலும், கடலோரங்களிலும் நிரம்ப உள்ளன. தற்போதும் பொதிகை மலையில் உள்ள 32 தீர்த்த கட்டங்கள் ரிஷிகள் நீராடும் தீர்த்தமாக உள்ளன.இவை தரும் பலன்கள் அளவிட முடியாதவை.

    இந்த தீர்த்த கட்டங்கள் தரும் நன்மைகளை ஒருங்கேப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் தீர்த்த யாத்திரை செல்லும் பழக்கத்தை வைத்திருந்தனர்.

    இந்த தீர்த்தங்களையும் விட மேன்மையானது ஆலயங்களில் ஒரு பகுதியாக உள்ள திருக்குளங்களாகும். ஆலயங்கள் எந்த கால கட்டத்தில் தோன்றியதோ, அதே காலத்தில் திருக்குளமான புஷ்கரணியும் வந்து விட்டது.

    கோவில் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளம்தான் நம் முன்னோர்களால் புஷ்கரணியாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. பிறகு அது அத்தலத்தின் இறைவன் நீராடும் இடமாக மாறியது.

    அர்ச்சகர் தினமும் அந்த குளத்தில் நீராடி, நீர் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்யும் பழக்கமும் உருவானது. தீர்த்தவாரி, ஆராட்டுத் திருவிழாக்கள் தோன்றிய பிறகு தீர்த்தங்களின் மகத்துவம் அதிகரித்தது.

    இதையடுத்து தீர்த்தங்களுக்கான வரலாறு உருவானது. ஒரு தலத்தில் சூரியன் குளம் ஏற்படுத்தி, நீராடி ஈசனை வழிபட்டு பேறு பெற்றால், அத்தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

    ராவணனை கொன்ற பாவம் நீங்க ராமர் நீராடி வழிபட்ட இடங்கள் எல்லாம் ராமதீர்த்தமாக இன்றும் உள்ளன.

    சில தீர்த்தங்கள் மற்ற தீர்த்தங்களை விட தனித்துவம் பெற்றிருக்கும். கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தக்குளம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சங்கு உற்பத்தியாகும் சங்கு தீர்த்தம், திருச்செந்தூரில் கடலோரத்தில் உள்ள நாழிக்கிணறு தீர்த்தம், சிதம்பரம் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தம், தமிழகத்திலேயே மிகப்பெரிய புஷ்கரணியான திருவாரூர் கமலாலயம் போன்ற தீர்த்தங்கள் பல்வேறு மகத்துவங்களைக் கொண்டதாகும்.

    கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தகுளம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பாற்கடலில் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட அமுத்ததில் ஒரு பகுதி இங்கு விழுந்து விட்டதாக புராணக் குறிப்புகள் உள்ளதால் இந்த தீர்த்தம் அமுத தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    சில ஆலய தீர்த்தங்கள் மூலவரின் கருவறையுடன் தொடர்பு கொண்டிருக்கும். மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம் `கோமுக தீர்த்தம்' வழியாக வந்து நேரடியாக குளத்துக்கு வந்து விடும்.

    திருப்பதி - திருமலையில் இத்தகைய அமைப்புதான் உள்ளது.

    ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக நீர், நேரடியாக புஷ்கரிணி தீர்த்த குளத்துக்கு வந்து விடும். வராக சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகி சுபம் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

    திருப்பதி மலையில் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்தாலும் இந்த புஷ்கரணியே உயர்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களின் வரலாறை நீங்கள் விரிவாகப் படித்தால் ஒவ்வொரு தலத்திலும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருந்ததற்கான குறிப்புகள் இருப்பதை காணலாம்.

    பெரும் பாலான ஆலயங்களில் 90 சதவீத தீர்த்தங்கள் கால ஓட்டத்தில் துரதிர்ஷ்ட வசமாக காணாமலேயே போய் விட்டன.

    விரல் விட்டு எண்ணக் கூடிய ஆலயங்களில் தான் சங்க காலத்தில் தோன்றிய தீர்த்தங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. இந்த தீர்த்தங்களில் பழமை சிறப்புடன் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.
    • அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

    பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும்.

    15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்த வர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

    இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

    இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்து இருந்து புதனும் - குருவும் ஜாதகத் தில் உச்ச நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களை யும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி- உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.

    மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ர கதியில் இருக்கும் போதும், சிம்மம்- விருச்சிகம்- கும்ப-மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெறும் போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் என்னும் ராகுவின் நட்சத்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தியைப் பெறுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்,

    "போற்றுகின்ற ஜோதிட நூல்

    பொய்யாது ஒருநாளும்''

    என்கிற ஜோதிட பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு.

    சூன்ய திதி, சூன்ய ராசி, சூன்ய கிரகம்

    1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    2. துதியை திதி தனுசு-மீனம் குரு

    3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்

    4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்

    5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்

    6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்

    7. சப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்

    8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்

    9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு

    12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்

    14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்

    • ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கரந்தை பஸ் நிறுத்தம் அருகில் ஆதி பீமராஜகோஸ்வாமி மடம் அமைந்துள்ளது.

    இங்கு ஆனி மாத பவுர்ணமி மற்றும் குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆதி பீம ராஜகோஸ்வாமி ஜீவசமாதியில் அமைந்துள்ள ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
    • சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    வேதாரண்யம்:

    ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்க வாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுனமகான் சித்தர் பீடத்தில் தினசரி பூஜை களுடன் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.

    பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்றிரவு பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது. சந்தன அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வேதாரண்யம்:

    வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வனதுர்க்கை அம்மன் கோவில்

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்க ளால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    மாணிக்கவாசகர் மடம்

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன சித்தர் பீடம் இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறும். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் ஆகியவை படையல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    ×