search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gajakesariyogam"

    ஜோதிடம் குறிப்பிடும் சிறப்பான யோகங்களில் குரு மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்கள் சம்பந்தப்படும் கஜகேசரி யோகமும் ஒன்று.
    ஜோதிடம் குறிப்பிடும் சிறப்பான யோகங்களில் குரு மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்கள் சம்பந்தப்படும் கஜகேசரி யோகமும் ஒன்று. ‘கஜம்’ என்றால் ‘யானை’, ‘கேசரி’ என்றால் ‘சிங்கம்’. பெருந்தன்மை, புத்திசாலித்தனம், கவுரவம், பெயர், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை இந்த யோகம் மூலம் ஒருவர் அடைகிறார்.

    யானைகள் சூழ, சிங்கம் நடந்து வருவது போன்ற நிலையை இந்த யோகம் குறிப்பிடுவதாக சொல்லலாம். இந்த யோகத்தில், குரு மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே சம்பந்தப்படுவதன் அடிப்படையில், குரு பகவானின் வாகனமான யானை மற்றும் கடக ராசி அதிபதியான சந்திரனின் அதிதேவதை அம்பிகையின் வாகனமான சிங்கத்தையும் இந்த யோகத்துடன் ஒப்பீடு செய்து கொள்ளலாம்.

    யானைக்கூட்டத்தை எதிர்கொண்டு, ஒரு சிங்கம் வெற்றி கொள்வதுபோல, கஜகேசரி யோகம் கொண்டவர் களுக்கும் அந்த திறன் இருக்கிறது. அதனால், ஜாதகத்தில் சிரமமான தசை - புத்திகள் நடந்தாலும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி ஆகிய கால கட்டங்களில் கஜகேசரி யோகம் அமைந்தவர்களுக்கு பெரிய கெடுதல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரன், குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளில் கஜ கேசரி யோகம் அமைகிறது. இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்க வேண்டுமானால் குரு அல்லது சந்திரன் ஆகியவை ஆட்சி, உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமலோ இருக்கவேண்டும். குரு அல்லது சந்திரன் வர்க்கோத்தமம் பெற்றிருப்பதும் சிறப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், குரு மற்றும் சந்திர தசை - புத்திகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் குரு அல்லது சந்திரன் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருப்பது, சந்திரன் அல்லது குரு நீச்சம் அடைந்திருப்பது, இதர கிரக சம்பந்தத்தால் பாதிப்பு அடைந்திருப்பது, தேய்பிறை சந்திரனாக இருப்பது அல்லது நவாம்சத்தில் குரு அல்லது சந்திரன் நீச்சம் பெற்றிருப்பது ஆகிய காரணங்களால் யோக பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.
    ×