search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold idol"

    தங்க சிலை செய்தது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் தமிழக கோவில்களில் தங்க சிலைகள் செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. #GoldIdolScam
    சென்னை:

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு சோமாஸ் கந்தர், ஏலவார் குழலி சிலைகள் புதிதாக தங்கத்தில் செய்யப்பட்டன.

    இந்த சிலைகளை செய்வதற்கு பக்தர்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் நன் கொடையாக பெறப்பட்டது. ஆனால் இந்த 2 சிலைகளும் தங்கம் சேர்க்காமலேயே செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன் மூலம் 8.75 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.

    இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் தனிப்படை போலீசார் பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தினர். சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகளை சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் தான் மோசடி பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

    இந்த வழக்கில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முத்தையா உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். இந்த மோசடியில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

    அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் ஒருவருக்கும், தற்போது பணியில் இருக்கும் அறநிலையத்துறை கூடுதல் ஆணையரான கவிதாவுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாப்பூரில் வசித்து வந்த பெண் அதிகாரி கவிதா அதிரடியாக கைது செய்யப்பட்டார். தனது வீட்டில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த கவிதாவை நடுவழியில் மடக்கிய போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.


    கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், கூடுதல் ஆணையர் கவிதாவை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் பிரிவு சிறப்பு கோர்ட்டு நீதிபதி அய்யப்பன் பிள்ளை வீட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். வருகிற 14-ந்தேதி வரை கவிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்து அறநிலையத்துறையில் துணை ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள கவிதா பதவி உயர்வு பெற்று கூடுதல் ஆணையராகி உள்ளார். தமிழகம் முழுவதும் இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் நடைபெறும் போது, அதற்கான பொறுப்பாளராக கவிதாவே நியமிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் கோவில்களில் தங்க சிலைகளை செய்ததில் இவர் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கவிதா கூடுதல் ஆணையரான பின்னர் சுமார் 7 ஆயிரம் கோவில்களில் திருப்பணிகள் நடந்துள்ளன.

    இதில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்க சிலைகள் மட்டுமின்றி தேர் செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. இதன் மூலம் 100 கிலோ அளவுக்கு தங்கம் மோசடி செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதன் பின்னணி குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதிகாரிகள் மட்டும்தான் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? இல்லை அரசியல்வாதிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்துள்ள மோசடியில் இந்து அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் ஒருவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை பெண் அதிகாரி கவிதா, கோர்ட்டில் உறுதி செய்துள்ளார்.

    நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் எல்லாம் கமிஷனருக்கு தான் தெரியும். நான் எனக்கு வந்த பைல்களை அவருக்கு அனுப்பி வைத்தேன் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இந்து அறநிலைய துறை முன்னாள் கமிஷனரை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். சிலை மோசடியில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. படித்து பார்க்காமல் கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டேன். அதுவே நான் செய்த பெரிய தவறு என்று கவிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் கமிஷனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. அடுத்த கட்டமாக அவர் மீதும் விரைவில் சட்ட நடவடிக்கை பாயும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலைய துறையின் பெண் அதிகாரி உயர் பதவியில் இருந்தவர், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #GoldIdolScam #Kanchipuram #EkambareswararTemple
    ×