search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google Engineer murder"

    பள்ளி அருகே காரை நிறுத்தி சாக்லேட் கொடுத்ததால் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Childkidnapping

    ஐதராபாத்:

    ஐதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் முகமது அஸம். 32 வயதாகும் இவர் ஐதராபாத் கச்சி பாவ்லியில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன் இருக்கிறான். ஐதராபாத் எர்ரகுந்தா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது நண்பர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த முகமது சலாம் மற்றும் நூர்முகமது, சல்மான் ஆகியோர் ஐதராபாத் வந்தனர்.

    இவர்கள் 3 பேருடன் முகமது அஸம் கர்நாடக மாநிலம் பிதர்நகரில் நடைபெறும் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார்.

    வழியில் கமால்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பள்ளி அருகே சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினார்.

    அப்போது கத்தார் நண்பரான சலாம் தான் கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளை எடுத்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தார். குழந்தைகளிடம் அவர்கள் அன்பாக பேசிக் கொண்டு இருந்தனர்.

    இதைப்பார்த்த கிராம மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகப்பட்டு விசாரித்தனர். அவர்கள் சொன்னதை நம்பாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்து போன முகமது அஸம் மற்றும் நண்பர்கள் காரில் அங்கிருந்து தப்பினர்.

    இதனால் கிராம மக்களின் சந்தேகம் வலுத்தது. கார் சென்ற வழியில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு அவர்கள் போன் செய்து குழந்தை கடத்தல் கும்பல் காரில் வருகிறது மடக்குங்கள் என்று தெரிவித்தனர்.

    உடனே பக்கத்து கிராம மக்கள் உஷார் ஆகி கார் வந்ததும் மடக்கி அதில் இருந்தவர்களை என்னவென்று கூட விசாரிக்காமல் சரமாரியாக தாக்கினார்கள். இதில் முகமது அஸம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். மற்ற 3 பேரும் காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி காரில் சென்றுவிட்டனர். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.

    நடந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்திலும் ஐதராபாத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான முகமது ஆஸம் குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்துள்ளனர். அப்பாவியை கொன்று விட்டார்கள். அவரை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கதறினார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக பிதர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் கிராம மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×