search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government bus driver arrest"

    அருமனை அருகே பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேரை அரிவாள் வெட்டி அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    அருமனை:

    அருமனை அருகே உள்ள சிதறாலில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதியும் உள்ளது.

    இன்று காலை 6.30 மணி அளவில் சிதறால் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயன் (வயது 49) என்பவர் இந்த பள்ளிக் கூடத்திற்குள் புகுந்தார். அவரது கையில் ஒரு அரிவாளும், வெட்டுக்கத்தியும் இருந்தது. அவர் நேராக மாணவிகள் தங்கும் விடுதிக்கு சென்று அங்கு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தார். மேலும் அங்கு இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார்.

    அப்போது விடுதியில் தங்கி இருந்த திற்பரப்பு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிகள் வர்ஷா, நந்தினி ஆகியோர் இதை பார்த்து பயந்துபோய் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்கள் இருவரையும் ஜெயன் அரிவாளால் வெட்டினார். இதில் அந்த மாணவிகளுக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதனால் மாணவிகள் அலறினார்கள். அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு பள்ளியின் மேலாளர் ஞானமுத்து அங்கு ஓடிச் சென்றார். மேலும் அவர் ஜெயனை தடுக்க முயன்றார். இதனால் அவரையும் ஜெயன் அரிவாளால் வெட்டினார். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பள்ளிக்கூட பஸ்களின் கண்ணாடிகளையும் அவர் உடைத்தார்.

    இதற்கிடையில் பள்ளிக்கூடத்தில் நடந்த அசம்பா விதங்களை அறிந்த அந்த பகுதி மக்கள் பள்ளிக்கூடத்தில் திரண்டனர். மேலும் சுதீர் (50) என்பவர் ஜெயனை பிடிக்க முயற்சி செய்தபோது அவரையும் வெட்டிவிட்டு தப்பிக் முயன்றார். உடனே பொதுமக்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு ஜெயனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு அவரை அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.

    அருமனை போலீசார் ஜெயனை கைது செய்தனர். மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 மாணவிகள் உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த சம்பவம் காரணமாக மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெற்றோரும், பொது மக்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மேலும் அருமனை போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    ஜெயன் எதற்காக பள்ளிக்கூடத்தில் புகுந்து மாணவிகளை வெட்டி தகராறு செய்தார் என்பது பற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயனின் மனைவி அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் 2 பிள்ளைகளும் அந்த பள்ளிக்கூடத்தில் தான் படித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×