search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Maternity Hospital"

    வரலாற்று சிறப்புமிக்க சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு அரசு மருத்துவமனைக்கு இன்று 175-வது வயது பிறக்கிறது. இந்த மருத்துவமனையில் பிறந்த அதிர்ஷ்டசாலிக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட உள்ளது. #Chennai #Egmore #GovernmentMaternityHospital #175years
    சென்னை:

    சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1844-ம் ஆண்டு கூவம் நதிக்கரை ஓரம் செயல்பட்ட இந்த மருத்துவமனை 1882-ம் ஆண்டு எழும்பூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு பாரம்பரியங்களை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை 175-ம் ஆண்டில் இன்று(புதன்கிழமை) காலடி எடுத்து வைக்கிறது. இதனை சிறப்பு விழாவாக தமிழக அரசின் சுகாதாரத்துறை கொண்டாடுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்து, தற்போது அதிக வயதுடைய ஒரு நபருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த அதிர்ஷ்டசாலி யார்? அந்த சிறப்பு பரிசு என்ன? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    எழும்பூர் மருத்துவமனை 1844-ம் தொடங்கப்பட்ட போது ஒரு மாதத்துக்கு 9 பிரசவங்கள் மட்டுமே நடைபெற்றது. தற்போது சராசரியாக 14 ஆயிரத்துக்கு மேலான பிரசவங்கள் ஒரு வருடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனையின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களே கண்காணிப்பாளர்களாக இருந்தனர். 1942-ம் ஆண்டு, முதல் இந்திய கண்காணிப்பாளராக டாக்டர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் பதவியேற்றார்.

    எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 1936-ம் ஆண்டு அகில இந்திய மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு காங்கிரஸ் நடைபெற்றது. இந்த மருத்துவமனையில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவ உபகரணங்கள் கொண்ட அருங்காட்சியகம் உள்ளது.

    100 ஆண்டுகளுக்கு முன்னர் மகப்பேறு குறித்த படிப்புகளும், இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 1973-ம் ஆண்டு கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மருத்துவமனையில் 2007-ம் ஆண்டு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு மையம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #Chennai #Egmore #GovernmentMaternityHospital #175years
    ×