search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Yoga"

    அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி வளாகத்தில், சர்வதேச யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பி.உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆகியோர் முன்னிலையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 300 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அனைத்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெருமை தமிழ்நாட்டை மட்டுமே சாரும்.

    சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இயற்கை வழியில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு, இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×