search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "governor palace seige"

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலைக்காக கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் வைகோ போராட்டத்தை தி.மு.க. ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #DMK #MKStalin
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ம.தி.மு.க., திராவிடர் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளன.

    வருகிற 3-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்திருந்தார். இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வைகோ கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

    இதனை ஏற்றுக் கொண்டு ம.தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.


    இது தொடர்பாக மு.க. ஸ்டாலின், வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு.

    ஆகவே அந்த 7 பேரையும் விடுதலை செய்யாமல் மனித நேயமின்றி காலம் தாழ்த்தி வரும் தமிழக கவர்னரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இணைந்து அறிவித்துள்ள “கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு” பாராட்டை தெரிவித்து அப்போராட்டத்தை வரவேற்கிறேன்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக கவர்னர் செயல்பட்டு, 27 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MDMK #Vaiko #DMK #MKStalin
    ×