என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gudka corruption"
சென்னை:
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்து கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு சரியாக அமல் படுத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் ரகசியமாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.டி.எம். குட்கா தயாரிப்பாளர் மாதவராவின் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள தயாரிப்பு ஆலைகள், சேமிப்புக் கிடங்குகளில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
அதோடு ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அந்த டைரியில் தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இருந்தன. லஞ்சம் பெற்றவர் பெயர், தொகை ஆகியவை தெளிவாக இருந்தன. தேதி வாரியாக இந்த தகவல்கள் இடம் பெற்று இருந்தது.
வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்தபோது தமிழக அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் அடிக்கடி குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றிருப்பது உறுதியானது. அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த டைரி பக்கத்தை நகல் எடுத்து, தமிழக அரசுக்கு அனுப்பிய வருமான வரித்துறை, லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
ஆனால் அந்த டைரி பக்கத்தின் அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வருமான வரித் துறையினர், தமிழக போலீசார் சேகரித்திருந்த தகவல்களைப் பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். அதோடு சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையின் பலனாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பல புதிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். சுமார் 25 பேர் வரவழைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சொன்ன பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, “இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் தெரிவிக்க” உத்தரவிட்டார். அதை ஏற்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.ஐ. கூறியிருப்பதாவது:-
குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. 31 இடங்களில் சோதனை நடத்தியது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 165-ன் கீழ் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தின்படி மேலும் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள் கிடைத்தன.
அதன் பேரில் 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இதில் குட்கா முறைகேடுகளில் தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. பலரது வாக்கு மூலங்களும் அதை உறுதிபடுத்துவதாக இருக்கின்றன.
உணவு பாதுகாப்பு, சுங்கத் துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு இருக்கிறது. சட்ட விரோதமாக குட்கா தயாரிக்கவும், தடையை மீறி குட்காவை விற்பனை செய்யவும் அரசு அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் ஆவணங்களை அழித்துள்ளனர். குற்றச்சாட்டை உறுதிப்படுத்த தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு சி.பி.ஐ. கூறி உள்ளது. சி.பி.ஐ.யின் இந்த தகவல் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீதான பிடியை இறுகச் செய்துள்ளது. #CBI #GutkhaScam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்