search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarat legislative election"

    • 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன.
    • மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் கடந்த 1995ம் ஆண்டு முதலே பாஜக கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.

    குஜராத்தில் தற்போது முதல் அமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் வருகிற 12ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

    இது தொடர்பாக குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் தொடருவார். அவரது பதவி ஏற்பு விழா வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    தேர்தலில் போட்டியிட்ட ஆத் ஆத்மி கட்சி இலவசங்களை வாரி வழங்கி குஜராத் மக்களை இழிவுபடுத்த முயன்றது. குஜராத் மக்களை அந்த கட்சியால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. மற்ற கட்சிகளும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி குஜராத் மக்களை ஏமாற்ற முயன்றன.

    அந்த கட்சிகள் அனைத்துக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். மாநிலத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

    மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது. மக்களின் ஆதரவை தொடர்ந்து இழந்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் முறையாக பதவி ஏற்றார். தற்போது 2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

    ×