search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Sterling Biotech case"

    ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். #Gujarat #BiteshPatel #LoanFraud #Albania
    புதுடெல்லி:

    ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.8,100 கோடி அளவுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும், பினாமி பெயரில் நிறுவனங்களும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேசரா (நிதின், சேத்தன்) சகோதரர்கள், மற்றும் அவர்களின் மைத்துனர் ஹிதேஷ் படேல் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தப்பி ஓடியிருக்கும் அவர்கள் அனைவரையும் கைது செய்ய சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஹிதேஷ் படேலுக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் கடந்த 11-ந்தேதி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர்.

    தப்பி ஓடிய தொழில் அதிபர்களில் நிதின் சந்தேசரா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இருப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் தகவல் வெளியாகி இருந்தது. அவரை கைது செய்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே சந்தேசரா சகோதரர்களின் மைத்துனரும், இந்த கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியுமான ஹிதேஷ் படேல், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் சிக்கியுள்ளார். இன்டர்போல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஹிதேஷ் படேலை அல்பேனிய சட்ட அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

    சந்தேசரா சகோதரர்கள் போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி பெயரில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு முக்கிய கருவியாக விளங்கியவர் ஹிதேஷ் படேல் ஆவார். எனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் தேடப்பட்டார்.

    தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதன்படி அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Gujarat #BiteshPatel #LoanFraud #Albania 
    ×