என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Handloom"
- குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
- சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
- கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் சி.ஐ.டி.யூ தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிறுமுகையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை வைத்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாவட்டத் தலைவர் சிங்காரவேலு, கோவை மாவட்ட செயலாளர் இ.என்.ராஜகோபால் முன்னிலை வைத்தனர்.
மாவட்ட பொருளாளர் டி.ஆர்.ராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம், கடலூர், பரமக்குடி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கைத்தறி சேலை ரகங்களை விசைத்தறியில் நெய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி செயல்படும் விசைத்தறிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
கைத்தறி சேலைகளின் மூலப் பொருட்களான பட்டு நூல், நூல் ஜரிகை ஆகியவற்றின் சந்தை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடக்க நெசவாளர் கூட்டுறவு வங்கி தொடங்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் நலிவடையும் மாதங்களில் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
கைத்தறி சேலைகளை சாமானியரும் வாங்குவதற்கு ஏதுவாக ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழக்கத்தில் இருந்த மருத்துவ திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.
- வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
- கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.
உடுமலை:
தமிழகத்தின் பாரம்பரியமான தொழில்களில், கைத்தறியால் நெய்யப்படும் நெகமம் கைத்தறி சேலையும் ஒன்று. புவிசார் குறியீடு பெற்று, தனித் தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது கைத்தறி சேலை. அதேசமயம், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பேட்டு பார்டருடன் கூடிய சேலையை, முறைகேடாக விசைத்தறியால் உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் தனித் தன்மையை இழந்து நிற்கிறது கைத்தறி சேலைகள்.
நெகமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவு மூலம் கைத்தறி சேலை உற்பத்தி செய்து வருகின்றனர். வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள்,வெளிநாடுகள் வரை அனுப்பி வைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு, நூல்விலை ஏற்றம், விற்பனை சரிவு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது கைத்தறி சேலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.
தமிழ்நாடு கைத்தறி ஆணையர் மூலம் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி,துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி,போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்களை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பேட்டு பார்டருடன் கூடிய சேலை கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் இவற்றை விசைத்தறி மூலம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். விதிமுறை மீறி இந்த ரகங்களை உற்பத்தி செய்தாலோ, கடைகளில் விற்பனை செய்தாலோ 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.
எனினும் நடைமுறையில் இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப் படுவதில்லை என்பதால் விசைத்தறியில் பேட்டு பார்டருடன் கூடிய சேலை உற்பத்தி செய்யப்பட்டு கைத்தறி சேலை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர் கைத்தறி நெசவாளர்கள்.
இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறும்போது, கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய பேட்டு பார்டருடன் கூடிய சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்வது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது. பல இடங்களில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி நடக்கிறது. அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை.
பெயரளவுக்கு ஆய்வு நடத்தி, ஆண்டுக்கு ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப் பதிவு, குறைந்த அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால் விசைத்தறியில் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. பாரம்பரியம் மிக்க கைத்தறி ரகங்களை பாதுகாக்க வேண்டுமானால் விசைத்தறி சேலை உற்பத்தியைத் தடுக்க அதிகாரிகள், தீவிரமாக செயல்பட வேண்டும். அபராதத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.
கைத்தறி நெசவாளி நந்தகுமார் கூறும்போது,மூலப்பொருட்கள் விலையேற்றம், கைத்தறி சேலைகள் தேக்கம் ஆகியவற்றால் கைத்தறி நெசவுத்தொழில் தற்போது கடுமையாக நலிவடைந்துள்ளது. இந்நிலையில், விசைத்தறியாளர்கள் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதால் கைத்தறித்தொழில் முற்றிலும் அழியும் நிலைக்கு செல்கிறது.
நெசவாளர்கள் பலர் தறி நெய்வதை விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் காய்கறி விற்பனை செய்கின்றனர். இதேநிலை நீடித்தால் கைத்தறி தொழில் அழிந்து விடும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டது நெகமம் சேலைகள். 'வெள்ளாவியில் வைத்தாலும் வெளுக்காத சேலை நெகமம் சேலை' என்ற சொலவடையே இந்த சேலையின் தரத்தை காட்டுகிறது. கைத்தறி நெசவு என்பது பாரம்பரியமான தொழில். இது அழிந்தால், மீண்டும் கொண்டுவர முடியாது.
கைத்தறியின் அழகு தனித்துவமானது. அதுவே நமது அடையாளம். கைத்தறி அழிந்தால் நமது சொந்த பாரம்பரியத்துடன் உள்ள தொடர்புகளை இழக்க நேரிடும். பாரம்பரிய கைவினை கலைஞர்களின்திறன்கள் வரும் தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும். கைத்தறித் தொழில் அழிந்தால் நாம் மிகவும் மதிப்புமிக்க ஒன்றை இழப்போம். எனவே தயவு செய்து கைத்தறித்தொழிலை காப்பாற்றுங்கள் என்றார்.
- 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.
- தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்டது.
- நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறிதுறை சார்பில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறிநெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோர காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்ப த்துடனும், தனித்துவத்துடனும் உற்பத்தி செய்யப்படு கின்றது.
மேற்படி கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ரகங்களை பெருமளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடவும் வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறையின்சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 4 நெசவாளர்களுக்கும் , தலா ரூ.50,000 வீதம் 6 நெசவாளர்களுக்கு என மொத்தம் 10 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காசோலையையும், 15 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளர் கூட்டுறவு சங்க 45 நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.
முன்னதாக நெசவாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பொன்கோவில் நகரில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பெரும்பாலான கைத்தறிகள் முடங்கி, பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
- தனியாரிடம் நெசவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர், கோவை மாவட்டத்தில் ஏராளமான கைத்தறிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் பெரும்பாலான கைத்தறிகள் முடங்கி, பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதையடுத்து, தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் தேவராஜன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பெரும்பாலான கைத்தறிகள் பாவு, நூல் இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு தீர்வாக கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினர் சேர்க்க வேண்டும். பாவு, நூல் உடனே வழங்க வேண்டும்.தனியாரிடம் நெசவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி துவக்க வேண்டும். 60 வயதான நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் பென்ஷனை 5000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய கைத்தறி நெசவாளர் தினமான வரும் 7-ந் தேதி அனைத்து கைத்தறி நெசவாளர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.
திருப்பூர்:
மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.
- புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
- ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.
திருப்பூர் :
கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும்.
கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும். தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.
- மதுரை மாவட்டத்தில் நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு-தீபாவளி போனஸ் வழங்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.
- அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மதுரை
மதுரை டவுன், மதுரை புறநகர், கைத்தறிநகர், சக்கிமங்கலம், வண்டியூர். பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன்நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எல்.கே.டி. நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகங்களான வேட்டி, கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நைஸ்ரக நெசவுத் தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் ஒரு தறி, இரு தறி அமைத்து நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் (மாஸ்டர் வீவர்) பாவு-நூல் மற்றும் கூலி பெற்று தொழில் செய்து வருகின்றனர். தற்போதைய கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக அவர்கள் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மாற்று வேலை வாய்ப்பின்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 30 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் 20 சதவீமும் வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஐக்கிய குழு நிர்வாகிகளான ஐ.என்.டி.யு.சி. தலைவர் கோபிநாத், பி.எம்.எஸ்.செயலாளர் சுதர்சன், ஜனதாதளம் பொருளாளர் ரவீந்திரன், ஏ.டி.பி. இணைச் செயலாளர் பத்மநாபன், சி.ஐ.டி.யு. ஈஸ்வரன்,
எல்.பி.எப்.துணைத் தலைவர் ஜெகநாதன், துணைச் செயலாளர் தாமோதரன் ஆகியோருக்கும், நைஸ்ரக கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளான மோதிலால், ராமபிரமம், கோவர்த்தனன், சுந்தர கோபால், சுப்பிரமணியன், சுரேஷ்பாபு, சிவநாத், பரமேசுவரன். சரவணன் ஆகியோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகத்தீர்வு ஏற்பட்டது.
அதன்படி வருகிற 24-ந் தேதி தீபாவளி முதல் 11 சதவீத கூலி உயர்வும், இந்த ஆண்டு (2022) தீபாவளி போனஸ் 16.5 சதவீதமும் வழங்குவது என்று இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு அடுத்த ஆண்டு (2023) தீபாவளி வரை அமலில் இருக்கும் என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
- நைஸ் ரக கைத்தறி நெசவாளர்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
- வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .
மதுரை
மதுரை அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழு தலைவர் கே .என் .கோபிநாத் ,செயலாளர் என்.ஆர்.சுதர்சன், பொருளாளர் ஏ.எஸ்.ரவீந்திரன், இணைச் செயலாளர் டி.ஆர்.பத்மநாபன், துணை த்தலைவர்கள் ஈஸ்வரன், ஜெகன் நாதன், துணை செயலாளர் தாமோதரன் ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை டவுன் ,மதுரை புறநகர் ,கைத்தறி நகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன் நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எஸ் .கே .டி .நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ் ரக கைத்தறி ஜவுளி ரகமான வேஷ்டி ,கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவு தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்கள் தற்போது அத்வாசியமான பொருட்களின் கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .
மாற்று வேலை வாய்ப்பு இன்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நெசவு தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் போனஸ் உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் வருகிற 23.10.2022 அன்றுடன் காலாவதி ஆகிறது.
எனவே வருகிற தீபாவளி பண்டிகை (24.10.2022)-ந் தேதி முதல் கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 40 சதவீதம் கூலி உயர்வு, தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை
- முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி
கல்லிடை:
கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவுத் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், கைத்தறி வளர்ச்சி ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவு செய்யும் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலுடன் சார்ந்த பாவு ஓடுதல், தார் சுற்றுதல் போன்ற சார்பு தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நெசவாளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கைத்தறி சேவை மைய இயக்குநர் முத்துசாமி, நெல்லை சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் சங்கரேஸ்வரி ஆகியோர் ஆலோசனையின் பேரில் முதல் கட்டமாக 6 ஆயிரம் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி பாளையங்கோட்டை, பேட்டை, பழைய பேட்டை, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, தெற்கு கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, வீரவநல்லூர், கிளாக்குளம், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கல்லிடைக்குறிச்சி கைத்தறி நெசவாளர்கள், நெசவு சார்ந்த தொழிலாளர்களுக்கு நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் மாரிமுத்து முன்னிலையில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது,
இதில், கைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, ஷேக் அப்துல் காதர், துணைத்தலைவர்கள் சாகுல்ஹமீது, பாடகலிங்கம், நெசவாளர் சேவை மைய முதுநிலை அதிகாரி சச்சின், இளநிலை அதிகாரி தீலிபன், கைத்தறி சங்க மேலாளர்கள் நடேசன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்