search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harika Dronavalli"

    • ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது.
    • 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார்.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

    அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி (31 வயது) நிரைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார். உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ளார். ஹரிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது 9 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டம் வெற்றார். தனது 10-வது வயதிலும் ஹரிகா மீண்டும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பதக்கத்தையும் வென்றார்.

    செஸ் உலகின் வெற்றிநடைபோட்டு வரும் ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார். இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக 2019-ல் ஹரிகாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஹரிகா மனதளவிலும், உடலளவிலும் தயாராகி வருகிறார். ஹரிகா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்காக மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஹரிகாவிற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்ட உள்ளது. செஸ் விளையாட்டை பொறுத்தவரை நீண்ட நேரம் அமர்ந்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    ×