search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Controls"

    தமிழக அரசு விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவது தொடர்பாக உருவாக்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. #VinayagarChathurthi
    இந்துக்களின் பண்டிகைகளில் நாடு முழுவதும் மிக விமர்சையாக நடத்தப்படும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திருவிழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அவை வழிபாடு செய்யப்பட்டு பிறகு கடலில் கரைக்கப்படுகிறது.

    மராட்டிய மாநிலம் மும்பையில்தான் விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக மிக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழா தொடங்கி சுமார் 35 ஆண்டுகள்தான் இருக்கும்.

    தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வழிபாடு செய்யும் வழக்கத்தை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிமுகம் செய்தார். முதலில் சென்னை திருவல்லிக்கேணியில் இந்த விழா தொடங்கப்பட்டது. நாளடைவில் விநாயகர் சிலைகளை நிறுவும் வழக்கம் சென்னையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சிலைகள் நிறுவப்படுவது அதிகரித்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் இதர நகரங்களுக்கும் விநாயகர் சிலை வழிபாடு பரவியது. தற்போது கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் விநாயகர் சிலைகளை நிறுவி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பழக்கம் உருவாகி இருக்கிறது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரம் சிலைகளை நிறுவி வழிபாடுகளை நடத்தினார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.

    இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. பொதுவாக கடந்த ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பே எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது முடிவாகி விடும்.

    அதற்கேற்ப விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் கொடுத்து அதற்கென அரங்கம் அமைக்கும் பணிகளை தொடங்கி விடுவார்கள். பூஜைக்கான ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த ஏற்பாடுகளில் திடீர் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் போக்கு தமிழக காவல் துறையில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடும் ஏற்பாட்டாளர்கள் அந்த சிலைகளை கடற்கரைக்கு எடுத்து சென்று கரைக்கும்போது நடத்தும் ஊர்வலம் போலீசாருக்கு பெரும் சவாலை கொடுக்கிறது.

    விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்பதில் போலீசார் மிக மிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு 24 விதமான புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும் கடந்த ஆண்டே தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 9-ந்தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகள் தொடர்பாக இந்த புதிய விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    24 விதிமுறைகளில் 17 விதிமுறைகள் மிக மிக கடுமையாக இருப்பதாக இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக 7 நிபந்தனைகளை ஏற்கவே இயலாது என்று விநாயகர் சிலைகள் வழிபாட்டு குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த நிபந்தனைகளை விலக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளை தளர்த்தி ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைப்படி விநாயகர் சிலைகளை வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. இது தொடர்பாக இந்து அமைப்புகள் சில அதிருப்திகளை சுட்டிக்காட்டி உள்ளன.

    இந்து அமைப்புகளுக்கு அதிருப்தி அளித்துள்ள அந்த புதிய விதிமுறைகளில் சில வருமாறு:-

    * விநாயகர் சிலைகளை முழுக்க முழுக்க களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும். ரசாயன கலவைகளை ஒருபோதும் சேர்க்க கூடாது.

    * தண்ணீரில் கரையாத ரசாயன வண்ணங்களை விநாயகர் சிலைகள் மீது பூசக்கூடாது. அவை கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது.

    * விநாயகர் சிலைகள் மிக உயரமான அளவுக்கு இருக்கக்கூடாது. 10 அடிக்கு மேல் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    * விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் முறையான கூரைகள் அமைக்கப்பட வேண்டும். அந்த கூரைகள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    * விநாயகர் சிலைகளை ஆன்மிக தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வி கூடங்கள் அருகில் அமைக்கக்கூடாது.

    *விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவே அல்லது எந்த மத அமைப்புகளுக்கும் ஆதரவாகவோ போர்டுகள் வைக்கப்படக்கூடாது.

    * விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் செய்த பிறகு 5 நாட்களுக்குள் அவற்றை எடுத்துச் சென்று கடலில் கரைத்து விட வேண்டும்.

    இப்படி 24 புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இவை ஏற்புடையவதாக இல்லை என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கூறி வருகின்றன. குறிப்பாக விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை மிகுந்த இடையூறு ஏற்படுத்துவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    மிக குறுகிய காலத்திற்குள் உள்ளாட்சி அமைப்புகள், காவல் நிலையம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து எப்படி தடையில்லா சான்றிதழ்களை பெற முடியும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் கேட்கிறார்கள். எனவே கடந்த ஆண்டு நடைமுறையை பின்பற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசின் புதிய விதிமுறைகளில் சில இந்துக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடத்துவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை இதற்காக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    விநாயகர் சிலைகளுக்கு எப்போது பூஜை நடத்த வேண்டும் என்பதை சிலைகளை நிறுவி உள்ளவர்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு முடிவு செய்யக்கூடாது என்பது இந்து அமைப்புகளின் வேண்டுகோளாக உள்ளது. இந்த சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு விநாயகர் சிலைகளை ஆண்டுதோறும் நிறுவி வழிபட்டு வரும் பக்தர்களிடம் எழுந்துள்ளது. #VinayagarChathurthi



    ×