search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Flood In Bhavani River"

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    மேட்டுப்பாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்த மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு கடந்த ஒரு மாதமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 500 கன அடியும், பகல் 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியும், மாலை 6 மணிக்கு 22 ஆயிரம் கன அடியும் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 97அடியில் ஒரே சீராக இருக்க அணைக்கு வரத்து எந்த அளவோ அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி திடீரென நீர் வரத்து அதிகரித்து. பில்லூர் அணைக்கு 44 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்தது. இதனை சேமித்து வைக்க முடியாததால் வரும் தண்ணீர் 44 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டுபாளையம் சமயபுரம் தடுப்பணை மற்றும் சிறுமுகை கிச்சகத்தூர் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறுமுகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்டப் பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. பாலத்தின் இணைப்பு சாலைகளும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றது. இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பரிசல் மூலம் காந்தையாற்றை கடந்து காந்தவயலுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரையோரப்பகுதியில் உள்ள வாழை தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புக்குள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது. பவானி ஆற்றில் வெள்ளம் இரைச்சலுடன் பாய்ந்து ஓடிகொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலத்தை பார்வையிடுவதற்காக லிங்காபுரம் வந்தார். தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலைகளை பார்வையிட்டார்.

    கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கார்மேகம், பயிற்சி கலெக்டர் சிநேகா மேட்டுபாளையம் தாசில்தார் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வசந்தாமணி பவானி சாகர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகள் இருந்தனர்.

    ×