search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Helmets Mandatory"

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. #Helmet #HC
    சென்னை:

    சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த மனு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் வாகன ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ‘கடந்த மாதம் 17-ந் தேதி வரை ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் விழிப்புணர்வால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதன்காரணமாக ஹெல்மெட் அணியாதது தொடர்பாக பதியப்படும் வழக்கு பாதியாக குறைந்து உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்த நீதிபதிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற அரசாணையை அமல்படுத்துவதில் பின்னடைவு இருப்பதாகவும், அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஹெல்மெட் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டனர்.

    பின்னர், தேசியக் கொடி பொருத்திய வாகனங்கள் வரும்போது சீருடையில் இருக்கும் காவல்துறையினர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது இல்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், காவல்துறையினர் ஹெல்மெட் அணிகிறார்களா? அதிகாரிகள் சீட் பெல்ட் அணிகிறார்களா? என்று கேள்வி எழுப்பி அதையும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பின்னர், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகுமா? என்பது குறித்து இன்றைய தீர்ப்பின் முடிவில் தெரியவரும். #Helmet #HC
    இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு 59 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #Helmet
    இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவு குறித்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் ‘தந்தி டி.வி.’ கருத்து கேட்டது. இந்த கருத்துக்கணிப்பு 32 ஊர்களில் 182 பேரிடம் கேட்கப்பட்டது.



    கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:-

    கட்டாய ஹெல்மெட் குறித்த அரசின் உத்தரவு ஏற்புடையது என 41 சதவீதம் பேரும், ஏற்புடையதல்ல என 59 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

    அரசின் உத்தரவை ஏற்காததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு, பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணிய தேவை இல்லை என 24 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். பின் இருக்கையில் ஹெல்மெட் அணிந்து பயணிப்பது சிரமமாக உள்ளது என 67 சதவீதம் பேர் கருத்து கூறியிருக்கிறார்கள். பயணத்திற்கு பிறகு ஹெல்மெட்டை எடுத்துச் செல்வது கடினமாக உள்ளதாக 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஹெல்மெட் தொடர்பாக அரசின் உத்தரவு குறித்து, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் என 95 சதவீதம் பேரும், இல்லை என 5 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

    இதுபோல, பல்வேறு இலவச பொருட்களை வழங்கும் அரசு, ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் ஹெல்மெட்டை கட்டாயமாக்கும் முன், சாலைகளை தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  #Helmet
    ×