search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "herbal milk"

    • 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீலநிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்கப்படுகின்றன. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கடந்த வாரம் நிருபர்களிடம் கூறும்போது, "மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகியவற்றை விரைவில் மக்களுக்கு கொடுக்க உள்ளோம்" என்று தெரிவித்து இருந்தார்.


    இந்நிலையில், இந்த 3 புதிய பொருட்கள் தொடர்பாக தீவிர ஆய்வு நடைபெறுகிறது. இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகிய 3 புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆராயப்படுகிறது. இதற்காக ஒரு தொழில்நுட்ப குழு, இவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஆவின் சார்பில் ரோஸ் மில்க் அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுபோல, இந்த 3 பொருட்களுக்கு எங்கு எல்லாம் தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, சோதனை அடிப்படையில் விநியோகிக்கப்படும். தேவை அடிப்படையில், இவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×