search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high judge"

    இந்தியா என்பது 130 கோடி மக்கள் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், இங்கு நடைபெறும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்தியா என்பது 130 கோடி மக்கள் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், இங்கு நடைபெறும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது உடல்நலம் குறித்த மருத்துவ சான்றிதழை வேட்புமனுவுடன் கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொள்ளாச்சியை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

    அவற்றின் விவரம் பின்வருமாறு:-

    ராஜகோபாலன்:- வேட்பாளர்கள் மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்யவேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் காலஅவகாசம் வேண்டும்.

    நீதிபதி என்.கிருபாகரன்:- அலுவலக உதவியாளர் முதல் நீதிபதிகள் வரையிலான பணிகளில் சேருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபர்களின் உடல் தகுதி குறித்து மருத்துவ சான்றிதழ் பெறப்படுகிறது. ஆனால் சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து இதுபோன்ற மருத்து சான்றிதழ் ஏன் கேட்பது இல்லை? அவர்களுக்கும் வேட்புமனுவுடன் மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும் என்று ஏன் கட்டாயமாக்கக் கூடாது?

    ராஜகோபாலன்:- தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்ல, ஓட்டு போடும் பொதுமக்கள், வேட்பாளர்களுக்கு என்ன நோய் உள்ளது? என்பது குறித்தெல்லாம் கவலைப்படுவது இல்லை. பொதுமக்களை பொருத்தவரை சின்னத்தை பார்த்துத்தான் ஓட்டு போடுகின்றனர்.

    நீதிபதி என்.கிருபாகரன்:- தமிழகத்தில், வாரிசு அரசியல் தான் நடக்கிறது. தாத்தா, மகன், பேரன், பேரனுக்கு பேரன் என்று ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலை தான்.

    பாராளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பி.க்களில் 45 சதவீதம் பேர் வாரிசு எம்.பி.க்கள் தான். ஜனநாயக நாட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் தொடர்ந்து ஆட்சிக்கு வரவேண்டுமா? மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும்.

    அமெரிக்காவில் அதிபராக இரு முறைக்கு மேல் வரமுடியாது. இருமுறை தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் ஏன் கொண்டுவரக்கூடாது. இதன் மூலம் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

    ராஜகோபாலன்:- சின்னத்தை பார்த்து தான் ஓட்டு போடும் நிலை இங்கு உள்ளது.

    நீதிபதி என்.கிருபாகரன்:- இந்த நிலை மாறவேண்டும். தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தான் முதல்-அமைச்சர் பதவிக்கு வருகின்றனர். மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று திரையுலகத்தை சேர்ந்தவர்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். அவர்களை இப்பதவிக்கு உட்கார வைத்தனர். ஆனால், இதுபோன்ற பெரும் ஆதரவும், வரவேற்பும் தற்போதைய நடிகர்களுக்கு மக்கள் கொடுக்கவில்லை.

    பெரும்பாலான அரசியல் கட்சிகள், குண்டர்களையும், நில அபகரிப்பாளர்களையும்தான் தேர்தலில் நிறுத்துகிறது. இவ்வாறு ரவுடிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.

    அரசியல் கட்சி பதிவுகளை எல்லாம் இஷ்டம்போல மேற்கொள்ளக்கூடாது. ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்து இருந்தால் மட்டுமே, அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்று கடுமையான விதிகளை கொண்டு வரவேண்டும்.

    ஆதார் அடையாள அட்டை முறையை சரியாக பயன்படுத்தியிருந்தால், 4 பாஸ்போர்ட்டுகளுடன் ஒருவர் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கமாட்டார். நான் யாரை சொல்கிறேன் என்று தெரிகிறதா?

    ராஜகோபாலன்:- அந்த நபர் யார் என்று தெரிகிறது. இதுபோன்ற நபர்களுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீசு அனுப்பினால், அந்த நோட்டீசை நீதிமன்றமே ரத்து செய்துவிடுகிறது. (இவ்வாறு கூறியதும், நீதிபதி உள்பட கோர்ட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்)

    நீதிபதி என்.கிருபாகரன்:- முன்பு தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் தேர்தல் சீர்திருத்தங்கள் பல கொண்டு வந்தார். அதுபோல, இந்திய தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும். புதிய விதிமுறைகளுடன் சட்டத்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு இந்தியா. ஜனநாயகத்தின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 130 கோடி மக்கள் உள்ளனர். அதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து அரசியல் பதவிக்கு வந்துகொண்டே இருக்கக்கூடாது. நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் அரசியல் பதவியில் அமரும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    ராஜகோபாலன்:- ஐகோர்ட்டு இதற்கு முன்பு பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், பல சீர்த்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளன. அதுபோல, வேட்பாளர் உடல் தகுதி குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பது குறித்து இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். அதன்படி திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews
    ×