search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu pooja room"

    பூஜை அறை நல்ல சரியான இடத்தில் அமைய வேண்டியது மிக அவசியம். எவ்வளவு நேரம் பூஜை செய்கிறோம் என்பதை விட எங்கு பூஜை செய்கிறோம் என்பதும் அவசியம்.
    நம் முன்னோர்கள் காலத்தில் மலை, கடல் ஆகிய பகுதிகளில் கோவில்கள் ஏன் அமைந்தன என்று ஆராய்ச்சி செய்தபோது அப்பகுதிகள் சிறப்பான வீர்யம் மிக்க ஆற்றல் மிகுந்தவை என்பது புலப்பட்டது. அதனாலேயே முன்னோர்கள் அப்பகுதிகளில் தங்கி ஆன்மிக மையங்களை அமைத்துள்ளனர்.

    பூஜை அறை என்பது கடவுளிடம் ஆசீர்வாதம் வாங்கும் இடம் என்பதால் நல்ல இடத்தில் இருப்பதால் மட்டுமே இது சாத்தியம். கோயில்களில் யாக கூடம் கும்பாபிஷேக சமயத்தில் ஈசான்யத்தில் மட்டுமே அமைப்பார்கள். ஏனெனில் பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக தான் சாய்ந்துள்ளது. எனவே வெளியிலிருந்து, அண்டவெளியிலிருந்து வரும் சக்தி பிரவாகம் சாய்மானமாக உள்ள ஈசான்யம் என்றும் வடகிழக்கிலிருந்து தான் பூமியின் அல்லது அறையின் ஒரு பகுதியின் உள்ளே நுழைய முடியும். எனவேதான் ஈசான்யம் இறைவனின் உறைவிடம் ஆகும்.

    எனவே வடகிழக்கு மட்டுமே இறையருள் மிளிரும் பகுதி என்பதை உணர வேண்டும். எனினும் ஈசான்யத்தை வடக்கு கிழக்கில் முழுமையாக அடைபடாமல் இருக்குமாறும் அமைப்பதே சிறந்தது. பூஜை அறையின் மேற்கூரை, மற்ற அறைகளை விட சற்று தாழ்வாக இருப்பது சிறந்தது.

    வட கிழக்கின் வடக்கு பகுதி செல்வ குவியலின் ஆதாரம். இதே இடத்தில் கிழக்கு பகுதி அறிவு களஞ்சியமாகும். பூஜை அறை மீது சூரியக் கிரணங்கள் தாராளமாக படுமானால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இப்படி அமைந்த பகுதியில் மேற்கு/தெற்கு சுவரை ஒட்டி கடவுள் படங்களை/சிலைகளை அமைக்க வேண்டும்.

    பூஜை அறைக்கு அருகில் குளியலறை அமைக்க கூடாது. பூஜை அறையில் குல தெய்வத்தை பிரதானமாக மையமாக அமைக்கலாம். தற்போது படங்கள் விற்பனையில் கடவுள்கள் இடம் மாற்றி வைத்துள்ளனர். எனவே கிழக்கு நோக்கியவாறு உள்ள கடவுளின் இருப்பிடம் கீழ்க்கண்டவாறு அமைக்கவேண்டும்.

    அதாவது, தென் மேற்கில் விநாயகர், அதையடுத்து கல்விக்கடவுள் சரஸ்வதி அல்லது ஹயக்ரீவர், அதையடுத்து குல தெய்வம், அதையடுத்து லக்ஷ்மி, ஒட்டியவாறு பாலாஜி, கடைசியாக முருகன் இடம் பெற வேண்டும். இப்படித்தான் கோயில்களில் கடவுள் சந்நதிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

    ஒரு அறையில் ஒரே கடவுள் பல உருவங்களில் இடம் பெறுவதுண்டு. இது சரியல்ல. ஆனாலும் பலர் வீடுகளில் விநாயகர் மையத்திலும் அதற்கு வலபுறம் லக்ஷ்மியும் இடம் பெற்றிருக்கும். இது தவறு. ஒரு கடவுளை மறைத்து மற்றொரு கடவுளை வைப்பதால் அதன் அருள் தடைபட்டு, ஆக்ரோஷமே மிஞ்சும். ஒன்றை ஒன்று மறைக்காத வண்ணமே அமைக்க வேண்டும்.

    தினசரி நாம் உணவு உண்ணுவது போலவே கடவுளுக்கும் உணவு படைப்பது அவசியம். சமைத்த உணவு இயலாத நிலையில், பால், கடலை, தேங்காய், அவல், வெல்லம், அரிசி போன்றவற்றைப் படைக்கலாம். ஆனால், மறுவேளைக்கு அல்லது மறு நாளைக்கு இவற்றை எடுத்து நம் உணவுடன் சேர்ப்பது நைவேத்தியமாகவும் அமையும்.

    தீபம் ஏற்றும் போது ஒற்றையாக ஏற்றாமல் (துயர நேரத்தில் மட்டுமே ஏக தீபம் சரி), இரண்டு அல்லது அதற்கு மேலாக ஏற்றுவது நல்லது. இரட்டை தீபங்கள் சூரிய சந்திரனை குறிப்பதால் அவை நம் வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கி வாழ்வை பிரகாசிக்க செய்யும்.

    ×