search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HR and CE Officials"

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கி விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HRandCE #HighCourt
    சென்னை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை முறையாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை தவறி விட்டதால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழுவை நியமித்து கோவிலை நிர்வகிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதி கேசவலு அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கோவில் சொத்துக்கள் மூலம் அற நிலையத்துறைக்கு ரூ.24 கோடி வாடகை பாக்கி வர வேண்டுயுள்ளதாகவும், இவற்றை வசூலிப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது தவிர பல்வேறு முறைகேடுகள் கோவில் நிர்வாகத்தில் நடைபெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வக்கீல் மகாராஜா கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதில் அளிப்பதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கி விவரங்களை விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

    அறநிலையத்துறை இந்த நிலையில் இருந்து இருந்தால் கோவில்களை யார் பாதுகாப்பார்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #HRandCE #HighCourt

    ×