என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband arrested"

    • மனைவியை கொலை செய்து விட்டு கணவர் நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 29).

    இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வேலைக்காக வந்தார். கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாக எழும்பாததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    விசாரணையில் மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்பொழுது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்த போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன்.

    தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில் எனது மனைவியின் கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர்.

    அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினேன். பின்னர் ரெஜினாபானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் துருவி துருவி விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 31).இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரின் குடிப்பழக்கம் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19.9.2022 அன்று ஆனந்தன் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன்- மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதில் மன வேதனை அடைந்த நந்தினி வீட்டில் இருந்த திரவத்தை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நந்தினியின் தாயார் விஜயா, தனது மகள் சாவிற்கு மருமகன் ஆனந்தன் கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
    • மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.

    தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    • தனியார் மில்லில் வேலை செய்யும் தனபால் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவரது மகள் நந்தினி (32).

    இவரை சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் தனபால்( 36) என்பவருக்கு கடந்த 2017 -ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த தம்பதி தாதகாப்பட்டி திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்திகா ஸ்ரீ (3), ஸ்ரீ சுதர்சன் ( 2) ஆகிய குழந்தைகள் உள்ளன.ஒரு தனியார் மில்லில் வேலை செய்யும் தனபால் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி குழந்தைகளுக்கு குலதெய்வம் கோயிலில் மொட்டை அடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று காலை தனபால் மது குடித்துவிட்டு நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் .

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாத தனபால் , மனைவி கோபத்தில் அறைக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

    மிக நேரம் ஆகியும் நந்தினி கதவை திறக்காததால் தனபால் அருகில் உள்ள உறவினர்களை அழைத்ததன் பேரில் அவர்கள் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது நந்தினி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.உடனடியாக நந்தினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நந்தினி யின் தந்தை சண்முகம் கொடுத்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினி உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் சேலம் சப் கலெக்டர் விஷ்ணுவர்தினி மற்றும் அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் நந்தினி யின் தற்கொலைக்கு கணவர் தனபால் தான் காரணம் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சந்தேக மரணமாக(174) பதியப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக (306) மாற்றப்பட்டு நேற்று நந்தினியின் கணவர் தனபாலை அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நேற்று இரவு மது போதையில் வந்த வேலாயுதம் மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார்.
    • ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். வேலாயுதத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரேவதி சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வேலாயுதம் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் வேலாயுதம் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறிவந்தார்.

    நேற்று இரவும் மது போதையில் வந்த வேலாயுதம் இதுதொடர்பாக மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேவதி அங்கேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரேவதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபோதையில் இருந்த வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.
    • இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலா ப்பட்டு இடையர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது காயத்ரி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்தார். அதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து டீக்கடை நடத்தி வருகிறார்.அப்போது முருகதாஸ்சுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

    இந்த விவகாரம் காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. இதில் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்தனர். இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் முருக தாஸ் தற்கொலைக்கு தூண்டியதால்தான் காயத்ரி இறந்து இருப்பது தெரியவந்தது. எனவே அதன்பேரில் வழக்குபதிந்து முருகதாசை போலீசார் கைது செய்தனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.
    • நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொட்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயலட்சுமி சேலம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை வெட்டியுள்ளார்.

    இதில் லேசான காயத்துடன் தப்பிய விஜயலட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் சூரமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43), கட்டிட மேஸ்திரி மற்றும் அதே கிராமத்தில் கடப்பா கல் விற்கும் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

    ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஜெய்சங்கருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் புனிதா, ஜெய்சங்கரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். பின்னர் குழந்தைகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இருப்பினும் ஜெய்சங்கருக்கு புனிதா நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் ஷூ கம்பெனிக்கு செல்ல பஸ்சிலிருந்து இறங்கி அழிஞ்சிக்குப்பம் மெயின் ரோட்டில் புனிதா நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மதுபோதையில் வந்த ஜெய்சங்கர் புனிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புனிதா மயங்கி விழுந்தார்.

    இதில் உயிருக்கு போராடிய புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்சங்கர் அவரது மனைவியை கத்தியால் குத்தும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கீழக்கரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவரது மகள் லுத்துபியா பேகம் (வயது40). இவருக்கும் கீழக்கரை சொக்கநாதர் தெருைவ சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின்போது 41 பவுன் நகையும், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சீர் பொருட்களும் கொடுத்துள்ளனர். லுத்துபியா பேகம்-முகமது அப்துல் காதர் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முகமது அப்துல் காதர் மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின்போது போட்ட நகையையும் வாங்கி விற்றுள்ளார்.

    இருந்தபோதிலும் லுத்துபியா பேகத்தின் தந்தை மருமகனுக்கு ஒரு கடை வைத்து கொடுத்து, அதனை நடத்த ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். முகமது அப்துல் காதர் மனைவியிடம் இருந்து பறித்துக்கொண்டு மேலும் பணம் வாங்கி வர சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    கணவரின் சகோதரி களான ஜெசிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாக சேர்ந்து வந்து லுத்துபியா பேகத்தை அடித்து மிரட்டி அவரது தந்தை கொடுத்த வீட்டை கணவருக்கு எழுதி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் லுத்துபியா பேகம் குடும்ப நலம் கருதி பொறுமையாக இருந்துள்ளார். அவருக்கு தந்தை கொடுத்த 11 சென்ட் நிலத்தை வற்புறுத்தி இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கியுள்ளார். பின்பு அந்த இடத்தை மனைவிக்கு தெரியாமல் தனது சகோதரி ரகுமா பீவி என்பவருக்கு விற்றுள்ளார். இதுபற்றி அறிந்த லுத்துபியா பேகம் தட்டிக்கேட்டதால்அவரை உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள்.

    இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லுத்துபியா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் கணவர் முகமது அப்துல் காதர், அவரது சகோதரிகள் ஜெஸிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி, ரகுமா பீவி மற்றும் சபீனா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.

    • ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
    • சுமதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு அடிக்கடி சண்டை போடுவார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி நேற்று மாலை சாமி கும்பிட வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தினுள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    நானும், எனது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கு ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுமதி, என்னிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு, அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார்.

    ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை என்னுடன் வீட்டில் வைத்து சண்டை போட்டுவிட்டு சுமதி கோவிலுக்கு சென்றாள். அங்கு நானும் சென்று வாக்குவாதம் செய்தேன். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயந்தி (50), இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.

    முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அதிகாலையில் முருகன் கண்விழித்தார். அவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினார். இதில் ஜெயந்தி துடிதுடித்து இறந்தார்.

    இதனையடுத்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

    இது சம்பந்தமாக தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரணடைந்துள்ள முருகனிடம் கடலாடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.

    பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.

    அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.

    பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.

    மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×