search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAS Officer home"

    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    சென்னை:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் முட்டை வினியோகிக்கும் பொறுப்பை காண்டிராக்ட் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப முட்டைகளை வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம், அரசு நிர்ணயித்த முட்டையை விட, ‘புல்லட்’ எனப்படும் எடை மற்றும் தரம் குறைந்த முட்டைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்குவதாக தெரியவந்தது. இதனால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்யும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் சத்து மாவு தயாரிக்கும் நிறுவனத்தை வருமானவரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    போலியான நிறுவனங்கள் மூலம் முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்தது போன்று போலி கணக்குகள் தயாரித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, ‘கிருஷ்டி பிரைடு கிராம்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததால் அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் கிருஷ்டி பிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சென்னையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளன. அங்கு வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் உள்ள அக்னி எஸ்டேட்ஸ் மற்றும் பவுண்டேசன் நிறுவனத்தில் வருமானவரித்துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த நிறுவனங்களின் அறங்காவலர் ஜெயப்பிரகாஷ், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகள் கோட்டூர்புரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ளன. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடந்தது.

    திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மட்டும் இன்றி அதிகாரிகள் குடியிருப்பு, குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள அந்த மாவு நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீடு, திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீடு மற்றும் ராசிபுரம் பகுதியில் உடுப்பத்தான்புதூர் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள சத்துமாவு நிறுவனம் மற்றும் கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல் வேப்பநத்தம் பகுதியில் உள்ள முட்டை குடோன்களிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களிலும் நடந்த சோதனையில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை கடந்த சில ஆண்டுகளாக வினியோகம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது சென்னை, கோவை, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டோம்.

    இந்த சோதனையின் போது ரொக்கப் பணமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆய்வுக்கு பின்னர்தான் ரொக்கம் மற்றும் ஆவணங்களின் துல்லியமான மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையில் இறங்க உள்ளோம். வரிஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    ×