search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ice companies sealed"

    கோவில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ் கீரிம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து 2 ஐஸ் கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே வானகிரி கிராமம் மீனவர் தெருவில் ரேணுகாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐஸ் விற்பனை செய்தனர்.

    கடும் கோடை வெயிலில் கோவிலுக்கு திரண்டு வந்திருந்த பக்தர்கள் அப்பகுதியில் விற்பனை செய்த பல்வேறு கம்பெனிகளில் குச்சி ஐஸ், குல்பி ஐஸ், பார் ஐஸ் போன்றவைகளை வாங்கி சாப்பிட்டனர்.

    அதேபோல் தங்களது குழந்தைகள் விரும்பி கேட்ட ஐஸ்களையும் வாங்கி கொடுத்தனர். ஐஸ் சாப்பிட்டு வீடு திரும்பிய வானகிரி கிராமத்தை சேர்ந்த பல குழந்தைகள், பெரியவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதில் வானகிரி வடக்கு தெருவை சேர்ந்த விவேகா (வயது3), மதுஷா (3), கனி(5), பூம்புகார் பகுதியை சேர்ந்த அபிஷ் ஆனந்த்(2),மித்ரன்(2), தரங்கம்பாடியை சேர்ந்த மு.சபிதா(5), வானகிரியை சேர்ந்த மித்ரன் (3), கவிஷா (5),பூம்புகாரை சேர்ந்த கனிஷ்கா (6), வானகிரியை சேர்ந்த ரஞ்சித் (12), பிரித்தி (14), பூம்புகாரை சேர்ந்த பவித்ரா(4), அனுசியா (2), சந்தியா(22),சர்மா(11), வசந்த் (2), பிரமிதா(4), முகேஷ்(5), அனு(4), நமீதா (4) உள்ளிட்ட 22 பேர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் தேவலதா தலைமையில் மருத்துவ குழுவினர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதி உள்ள 85-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி தாசில் தார் சபீதாதேவி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வானகிரி கிராமத்தில் சுகாதார குழுவினர்கள் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐஸ் மாதிரியை திரட்டி ஆய்வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள், காலாவதியான ஐஸ்சை விற்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பூம்புகார், சீர்காழி, திருவெண்காடு, செம்பனார் கோவில் பகுதிகளை சேர்ந்த 4 ஐஸ் கம்பெனிகளில் சுகாதார துறையினர் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மணிக் கிராமம் பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் நடத்தி வந்த ஒரு ஐஸ் கிரீம் கம்பெனிக்கும், திருவெண்காடு பகுதியில் மற்றொரு ஐஸ் கம்பெனிக்கும் சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் காலாவதியான ஐஸ்கீரிம்களையும் பறிமுதல் செய்தனர்.
    ×